Take a fresh look at your lifestyle.

ரூ. 60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி நடவடிக்கை

58

தமிழகத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தமிழக அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தீவிர நடவடிக் கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதனையடுத்து அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் திருவள்ளுர் மாவட்ட அமலாக்கப் பிரிவு போலீசார் அங்குள்ள எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வரவேண்டிய குறிப்பிட்ட வாகனம் மாற்று பாதை வழியாக சென்றது தெரியவந்தது.

அதனையடுத்து தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட அமலா க்கப்பிரிவு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் டொயோட்டா இன்னோவா வாகனத்தை மடக்கி சோதனையிட்டதில் அதற்குள்ள 2 கிலோ கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்த ஹரி முருகன், அந்தோனி, கார்த்திக் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு டொயோட்டோ எட்டியோஸ் வாகனத்தில் மற்ற மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக தெரிவித்தனர். அது தொடர்பாக சென்னை மற்றும் மதுரை மாவட்ட எஸ்பிக்களுக்கு அந்த வாகனத்தை மடக்கிப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுகோட்டை, மத்திய நுண்ணறிவு பிரிவு திருச்சி மற்றும் மதுரை குழுவினர் தலா 2 கிலோ எடை கொண்ட 99 கஞ்சா பார்சல் மொத்தம் 198 கிலோ கஞ்சாவையும் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். ஆக மொத்தம் ரூ. 60 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய அஜித்குமார் என்பவரை தஞ்சாவூர் போலீசார் கைதுசெய்தனர். 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.