சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் ரூ. 5 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அம்பத்தூர் எஸ்டேட், ஐசிஎப் காலனியில் வசித்து வருபவர் சிவரஞ்சனி (27). இவர் நேற்று முன்தினம் அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் ‘‘எனது கணவர் ஜெயராம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் ரூ. 5 லட்சம் கேட்டு கடத்தி வைத்துள்ளனர்’’ என தெரிவித்திருந்தார். அது தொடர் பாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கடத்தப்பட்ட ஜெயராமை மீட்டனர். அவரை கடத்திச் சென்ற சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்த திவாகர் (40), தேவராஜ் (40), பொன்னேரியைச் சேர்ந்த ஹேமநாதன் (41) பாலாஜி (38), அயப்பாக்கம் ஸ்டீபன் ராஜ் (36), அத்திப்பட்டு தினேஷ் குமார் (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 6 பேரிடம் இருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரும் விசாரணைக்குப் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.