Take a fresh look at your lifestyle.

ரூ, 5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது

124

சென்னை குரோம்பேட்டையில் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், குபேர நகர் வேங்கிகால் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷினி (வயது 53). இவர் கடந்த 2ம் தேதியன்று தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘தனக்கும் தனது கணவர் மற்றும் உறவினருக்கும் சொந்தமாக சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்புள்ள 41 கிரவுண்ட் இடம் உள்ளது. இதனை சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக விலைக்கு வாங்கி சுற்று சுவர் எழுப்பி பராமரித்து வந்தேன். அந்த இடத்தினை சென்னை கீழ்க்கட்டளை, வேலுசாமி நகர் மெயின் ரோட்டில் முகவரியைச் சேர்ந்த செல்வி திருமண மண்டபத்தை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் அபகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார். வல்லம் பகுதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான எனது இடத்தில் நான் எழுப்பியிருந்த சுற்றுச் சுவரினை இடித்து சேதப்படுத்தி வேறொரு இரும்பு கேட்டினை அமைத்து பூட்டி வைத்து விட்டார். இடத்தின் உரிமையாளர்களான நாங்கள் உள்ளே செல்லமுடியாதபடி செய்துள்ளார். மேலும் அந்த இடத்தின் உள்ளே தூண்களை உடைத்து சேதப்படுத்தி விட்டார். ஏழுமலையிடம் கேட்க சென்றபோது எங்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அந்த இடத்தை கேட்டு மீண்டும் வந்தால் உயிரோடு விடமாட்டேன் என மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அமல்ராஜ் பல்லாவரம் போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தியதில் சுபாஷினி அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ரூ. 5 கோடி நிலத்தினை அபகரித்த முன்னாள் வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலையை கைது செய்தனர். அவர் தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.