தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் உயர்மட்ட பாதுகாப்பு செல்களில் சிறைக் காவலர்களுக்கு ரூ. 48 லட்சம் செலவில் உடலோடு பொருத்தியபடி இயங்கும் சீருடை கேமராக்கள் வழங்கி சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணைச் சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. சிறைகளில் சுமார் 20 ஆயிரம் கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இந்தச் சிறைகளில் உயர்மட்டப் பாதுகாப்பு செல்கள் உள்ளன. இங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பயங்கரவாதிகள், ஆயுள் தண்டனைக் கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் பாதுகாப்பு கருதியும் கைதி களை கண்காணிக்கும் நோக்கத்திலும் சிறைத்துறையில் தற்போது பல்வேறு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிறைத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட டிஜிபி அமரேஷ் புஜாரி அது தொடர் பாக புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை ஆகியவற்றில் மொத்தம் 50 பாடி கேமராக்கள் சிறைக்காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் சென்னை புழல் சிறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த பாடி கேமரா அனைத்து மத்திய சிறைகளிலும் அறிமுகப் படுத்தப் படவுள்ளது. இந்த கேமராக்கள் சிறை வளாகத்தில் உயர்மட்டப் பாதுகாப்பு பணியில் உள்ள சிறைத்துறை காவலர்கள் மட்டும் பயன்படுத்துவார்கள். இந்த கேமராவின் முக்கிய சர்வர் சென்னையில் உள்ள சிறைத்துறை இயக்குநர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் சிறையில் நடக்கும் நிகழ்வுகளை சென்னையில் இருந்தபடியே சிறைத்துறை தலைவர் கண்காணிக்க முடியும். இதன் மூலம் சிறைகளில் நடக்கும் நிகழ்வுகளை நேரில் கண்காணிக்க முடியும் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.