சுக்லால் சவுத்ரி என்பவர் ராஜஸ்தான் ட்ரைலர் டிரான்ஸ்போர்ட் மற்றும் சுக்லால் சவுத்ரி அன்டு பிரதர்ஸ் என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை ராஜஸ்தான் மற்றும் சென்னை மாதவரத்தில் நடத்தி வருகிறார். இதன் சென்னை அலுவலகத்தை சுக்லால் சவுத்ரியின் உறவினரான ராம்லால் என்பவர் கடந்த 10 வருடங்களாக மேலாளாராக இருந்து நிர்வாகம் செய்து வந்துள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை சுக்லால் தனது நிறுவன கணக்கு வழக்குகளை சரிபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் 2018 ஆம் வருடம் சுக்லாலின் மகனுக்கு விபத்து ஏற்பட்டு அதனால் கம்பெனி கணக்கு வழக்குகளை பார்க்காமல் இருந்துள்ளார். அதன் பிறகு 2021ம் ஆண்டு ராம்லால் பராமரித்து வந்த கம்பெனி கணக்கு வழக்குகளை சுக்லால் பார்த்த போது அதில் முறைகேடு செய்துள்ளது தெரியவந்தது.
இதனல் தன்னுடைய ஆடிட்டர் மூலம் கம்பெனி கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது கம்பெனி கணக்குகளில் ராம்லால் ரூ. 3 கோடி வரை கையாடல் செய்துள்ளதாக தெரியவந்தது. மேலும் கம்பெனி வங்கி கணக்குகளிலிருந்து பணத்தை ராம்லால் தனது மனைவி சுனிதா தேவி வங்கி கணக்கிற்கும் அவரது உறவினர்களான மற்ற எதிரிகளின் வங்கி கணக்குகளுக்கும் முறைகேடாக அனுப்பி பணம் கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக சுக்லால் சவுத்ரி போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோசடி நடந்தது உண்மை என்பது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான தனிப்படையினர் தலைமறைவாக இருந்து வந்த ராம்லால் சௌத்ரி (37), இவரது மனைவி சுனிதா தேவி (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் நேற்று (10.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்படடனர்.