ரூ. 1,100 முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெகாட்ரான் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் தொழிற்சாலையை செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டியில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது:
தைவான் நாட்டினுடைய மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய பெகாட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியைத் தொடங்குவதை நான் வரவேற்கிறேன். இந்த உற்பத்தியைத் தொடங்கு வதன் மூலமாக தமிழ்நாட்டின் மீது நீங்கள் வைத்திருக்கிருக்கக்கூடிய நம்பிக்கை வெளிப்படுகிறது. இதுபோன்ற பல நிறுவனங்களை நீங்கள் தொடங்க வேண்டும். – இது போன்ற பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். பெகாட்ரான் நிறுவனமானது, தைவான் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கணினி, தகவல்தொடர்பு சாதனங்கள், நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம். உலகின் பல்வேறு பகுதிகளில் தன்னுடைய உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளதன் மூலமாக, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிற நிறுவனங்களிலும் ஒன்றாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற நிறுவனத்திற்கு ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்து தரக்கூடிய ஒப்பந்த உற்பத்தியாளராகவும் இந்த நிறுவனம் விளங்கி வருகிறது. முன்னணி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள முன்வந்துள்ளது மட்டுமின்றி, தனது உற்பத்தித் திட்டத்தினை தமிழ்நாட்டில் நிறுவியது எனக்கு உள்ளபடியே இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பிராண்ட் ஒன்று தமிழகத்தில் தயாராவது என்பது தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை. இந்த பேக்டரி மூலம் பெருமளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இப்போது மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதியை இந்த ஆட்சி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதனை நாங்கள் ஒரு கடமையாக நினைத்து செய்கிறோம். இதன் மூலமாக பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை பெறுகிறார்கள். பெண்கள் பணிபுரிவதற்கு ஏதுவான சூழ்நிலை தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
நான்காம் தொழில் புரட்சியில் (Industry 4.0) மின்னணுவியல் துறை, மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மாநிலத்தின் உற்பத்தி வரைபடத்தையே மாற்றி அமைத்திடக் கூடிய வல்லமை படைத்ததாக விளங்குகிறது. அதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தத் துறையில் தமிழ்நாடு மிகப் பெரும் வளர்ச்சி அடைந்து, இந்திய அளவிலான மின்னணுவியல் சார்ந்த உற்பத்தியில், 20 விழுக்காடு பங்களிப்பு அளித்து வருகிறது. சாம்சங், ஃபாக்ஸ்கான், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், சான்மினா, போஷ், டெல், சால்காம்ப், டெல்டா எலக்ட்ரானிக்ஸ், டாடா எலெட்ரானிக்ஸ் போன்ற மிகப் பெரும் மின்னணுவியல் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் திட்டங்களை அமைத்துள்ளதுடன், விரிவாக்கத் திட்டங்களையும் நமது மாநிலத்தில் மேற்கொண்டு வருகின்றன.
கைபேசி உற்பத்தித் திட்டங்கள் மட்டுமல்ல, கணினிகள், கணினிச் சாதனங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், White goods என்று சொல்லப்படும் குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், எல்.இ.டி. விளக்குகள் போன்ற உற்பத்தித் திட்டங்கள் தமிழ்நாட்டில் பரவலாக அமைந்துள்ளன. தமிழ்நாடு அதிக அளவில் மின்னணுவியல் உற்பத்தித் திட்டங்களை ஈர்த்திருப்பதை இதன் மூலமாக நாம் அறியலாம். இதைக் கருத்தில் கொண்டுதான், மின்னணுவியல் துறையை, தமிழ்நாடு அரசு வளர்ந்து வரும் துறை என்று வகைப்படுத்தியுள்ளது. வெகு விரைவில் ‘தமிழ்நாடு மின்னணு வன்பொருள் கொள்கை’ வெளியிடப்பட உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதியைக் கணிசமாக அதிகரிப்பது என்ற நோக்கங்களுடன்தான், இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், மின்னணுவியல் துறை சார்பில் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள நிறுவனங்களை, தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பெரும்புதூர், ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் என்று மின்னணு உற்பத்தி மையங்கள் பெருகி வருகின்றன.
மின்னணுவியல் துறை மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் தமிழ்நாடு முன்னணி வகிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. முன்னணி அடைந்தவுடன், முதல் நிலையை நோக்கி உயர வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். 2030- ம் ஆண்டிற்குள் நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் எங்களது லட்சிய இலக்கு. இதன் பொருட்டு, உயர் தொழில்நுட்பத் திட்டங்களையும், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் திட்டங்களையும் ஈர்ப்பதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு துறையிலும், மதிப்புக் கூட்டு உற்பத்தி மேற்கொள்ளும் திட்டங்களையும், பன்முகப்படுத்தும் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறான முயற்சிகளின் விளைவாக, அண்மையில்தான் ஒரு மிகப் பெரிய செமி-கண்டக்டர் உற்பத்தித் திட்டத்தைத் தமிழ்நாட்டில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இத்தகைய நேரத்தில் பெகாட்ரான் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் உற்பத்தித் திட்டம் இங்கே துவக்கப்பட்டுள்ளது. அது எங்களுக்கு உள்ளபடியே மகிழ்ச்சியை அளிக்கிறது, உற்சாகத்தை அளிக்கிறது. இதற்காக பெகாட்ரான் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரம், உங்கள் இரண்டாவது கட்ட உற்பத்தித் திட்டத்தினையும் விரைவில் நீங்கள் இங்கேதான் துவங்க வேண்டும், துவங்கப் போகிறீர்கள் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் போன்றே, பிற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட அழைத்து வாருங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பெகாட்ரான் நிறுவனத் தலைவர் ஜெங் ஜியான் ஜாங், மேலாண்மை இயக்குநர் லின் ஜியு டேன், முதுநிலை துணைத் தலைவர் டென்சி யாவ், முதன்மை செயல் அலுவலர் கியு ஷிங் ஜங், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.