Take a fresh look at your lifestyle.

ரூ. 1.50 கோடி தங்க நகைகளுடன் சாலையில் மயங்கிக் கிடந்த நகைக்கடை ஊழியர்: பத்திரமாக மீட்டுக் கொடுத்த இன்ஸ்பெக்டர், ஜீப் டிரைவர்

74

ரோட்டில் ரூ. 1.50 கோடி நகைகளுடன் சாலையில் மயங்கிக்கிடந்த நகைக்கடை ஊழியரை மீட்டு நகைகளை பத்திரமாக கடை உரிமையாளரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் மற்றும் ஜீப் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

நேற்று மாலை 6 மணியளவில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவா ஆனந்த் மற்றும் அவரது டிரைவர் தீபக் சக்ரவரத்தி ஆகியோர் ரோந்துப் பணியில் இருந்தனர். பாடி மேம்பாலம் அருகில் வந்த போது அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மயங்கி சாலை ஓரம் கிடந்துள்ளார். அவரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்த சொன்ன இன்ஸ்பெக்டர் அந்த நபரின் அருகில் சென்று பார்த்தார். அவர் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அந்த நபர் அருகில் கிடந்த பையையும் பத்திரப்படுத்தினார். அதற்குள் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 75 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்தப்பையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள பரத் ஜுவல்லரியின் முகவரி உள்ளது தெரியவந்தது. அதனையடுத்து அந்த நகைகளை இன்ஸ்பெக்டர் சிவா அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதனையடுத்து அந்த நகைக்கடைக்கு அண்ணாநகர் போலீசார் தகவல் தெரிவித்தனர். அண்ணாநகர் உதவிக்கமிஷனர் ரவிச்சந்திரன் அந்த நகைக்கடை உரிமையாளர் கதிரவன் என்பவரை நேரில் வரவழைத்து அவரிடம் அந்த நகைகள் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது பாடி மேம்பாலம் அருகில் மயங்கி கிடந்த நபர் அவரது கடையில் பணிபுரிந்த 55 வயது ஊழியர் என்பதும் அவர் புழலில் உள்ள அவர்களது நகைப் பட்டறையில் இருந்து நகை களை எடுத்துக் கொண்டு மேற்கு மாம்பலம் வரும் வழியில் அவர் மயங்கி விழுந் ததும் தெரியவந்தது. அதற்குறிய ஆவணங்களை நகைக்கடை உரிமையாளர் கதிரவன் போலீசில் சமர்ப்பித்தார். அதனையடுத்து போலீசார் அந்த நகைகளை கதிரவனிடம் ஒப்படைத்தனர். தனது நகைக்கடை ஊழியரை காப்பாற்றியது மட்டுமின்றி ரூ. 1.50 கோடி மதிப்புள்ள நகைகளை பத்திரமாக மீட்டுக் கொடுத்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவா ஆனந்த், ஜீப் டிரைவர் தீபக் சக்கரவரத்தி ஆகியோருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார். மேலும் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரின் நேர்மையை கமிஷனர் சங்கர்ஜிவால், இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி ஆகியோர் வெகுவாக பாராட்டினார்.