Take a fresh look at your lifestyle.

ரூ. 1 கோடி கடன் வாங்கிய பணத்தை திரும்ப தராததால் தொழிலதிபர் கடத்தல்: கத்தி, துப்பாக்கிகளுடன் 6 பேர் கும்பல் கைது

mambalam kidnap case 6 persons arrested with guns

67

பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக மாம்பலம் பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தொழிலதிபரை கடத்திய 6 பேர் கும்பலை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்தனர்.

சென்னை, தி.நகர், ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 46). நேற்று (20.08.2022) மதியம் 3 மணியளவில் அவர் வீட்டிலிருந்தார். அப்போது, அவரது நண்பரான ஆரோக்கியராஜ் என்பவர் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சுமார் 5 நபர்களுடன் வீட்டினுள் நுழைந்துள்ளார். சரவணனிடம் தனக்கு தர வேண்டிய பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி சரவணனை அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 விலையுயர்ந்த கார்கள், விலையுயர்ந்த வாட்ச் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றனர். இது குறித்து சரவணனின் சகோதரர் முத்துகுமரன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணைக்கமிஷனர் நரேந்திரன் நாயர் ஆகியோர் மேற்பார்வையில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் குற்றவாளிகளின் கார் மற்றும் கடத்திச் செல்லப்பட்ட கார்களின் விவரங்கள் மூலம் கடத்தல் ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதனையடுத்து கடத்தல் ஆசாமிகளை குடியாத்தத்தில் வைத்து போலீசார் கைது செய்து சரவணனை பத்திரமாக மீட்டனர்.

சரவணனை கடத்திச் சென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கரூர் அரவிந்த்குரு (23), திருப்பூர் அப்ரோஸ், மதுரை அஜய் (24), விஜயபாண்டி (25), கோவை நாகேந்திரன் (31) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சரவணன் வீட்டிலிருந்து திருடிய 2 கார்கள், 1 விலையுயர்ந்த Ferrari வாட்ச், 9 செல்போன்கள் மற்றும் எதிரிகளிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 1 கார், 1 இருசக்கர வாகனம், 7 செல்போன்கள், ஆப்பிள் லேப்டாப், கத்தி, பொம்மை துப்பாக்கி மற்றும் இரும்பு பொருட்கள் என மொத்தம் 3 கார்கள், 1 இருசக்கர வாகனம், 16 செல்போன்கள், 1 ஆப்பிள் லேப்டாப், கத்திகள், 2 பொம்மை துப்பாக்கிகள் மற்றும் இரும்புப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சரவணன், ஆரோக்கியராஜ் ஆகியோர் வீடு கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் சவுடு மணல் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் தொடர்பாக சரவணன் ஆரோக்கியராஜுக்கு தர வேண்டிய ரூ. 1 கோடி பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், ஆரோக்கியராஜ் அடியாட்களுடன் சரவணன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி சரவணனை கடத்திச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தப்பட்ட சரவணன் என்பவரை பத்திரமாக மீட்ட காவல் அதிகாரிகள் தலைமையிலான குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெகுவாகப் பாராட்டினார்.