ராஜ்பவனில் 12–ந்தேதி பொங்கல் விழா அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தை, அரசின் இலச்சினையை தவிர்த்த கவர்னர்
ராஜ்பவனில் 12 ந்தேதி பொங்கல் விழா கொண்டாட கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ‘தமிழ்நாடு’ என்று வார்த்தையையும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் தவிர்த்து பொங்கல் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் வரும் 12 ந்தேதி பொங்கல் விழா கொண்டாடப் பட உள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர், பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விழா அழைப்பிதழில் “2023ம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ம் நாள் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, லட்சுமி ரவி ஆகியோரும் அன்புடன் அழைக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அழைப்பிதழின் மேலே இந்திய அரசின் இலச்சினை அச்சிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசின் இலச்சினையில் ‘தமிழ்நாடு’ என்று எழுதப்பட்டிருப்பதால் மாநில அரசின் இலச்சினையும் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. மாறாக மத்திய அரசின் இலட்சினை மட்டுமே இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் 14 ந்தேதி சித்திரை விழாவுக்கு கவர்னர் மாளிகையில் மாலை 5 மணியளவில் ஒரு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பிதழில் தமிழக அரசின் இலச்சினையும், தமிழ்நாடு ஆளுநர் எனவும் அச்சடிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த 2 அழைப்பிதழ்களை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், “கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் 3 இடங்களிலும் இந்திய அரசின் இலச்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலச்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். சட்டசபையில் இருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தனது கண்டனத்தையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.