பஞ்சாப்பில் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இன்று காலை பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரி மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் 24 மணி நேரத்திற்கு யாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் நடைபயணம் பஞ்சாப் மாநிலம் தேகர் பகுதியில் உள்ள சிர்ஹிந்த் பகுதியில் கடந்த புதன்கிழமை இருந்து தொடங்கியது. பஞ்சாப் மாநிலத்தில் கடும் பனி நிலவி வருகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் ராகுல் தொடர்ந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் அவருடன் சென்று அவரை உற்சாகப்படுத்தி வந்தனர். இன்று காலை லூதியானா பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணம் தொடங்கியது.
இதில் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் சவுக்ரி பங்கேற்றார். நடை பயணம் பல்லூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சந்தோக் சிங் சவுத்ரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் பக்வாராவிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற் கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 76. தகவல் அறிந்து நடைப்பயணத்திலிருந்து பாதி வழியிலேயே ராகுல் மருத்துவமனைக்கு புறப் பட்டுச் சென்றார். அதன் பின்னர் சந்தோக் சிங் இல்லத்துக்கு சென்று அவரின் குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினார். சந்தோக் சிங் மறைவைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமை நடைப்பயணம் அடுத்த 24 மணிநேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகலில் ஜலந்தர் அருகே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.