நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட ஹிஸ்டரி ஷீட் ரவுடியை 1,028 நாட்கள் சிறையிலடைத்து சென்னை திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, பெரும்பாக்கம், 100வது பிளாக், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமார் (எ) பூகுமார், (40). இவர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி வழக்குகள் என சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ளன. திருவல்லிக்கேணி காவல் நிலைய ஹிஸ்டரி ஷீட் ரவுடியான பூகுமார் கடந்த 25.08.2022 அன்று சென்னை, திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் முன்பு சாட்சிகளுடன் ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 3 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால் குமார் (எ) பூகுமார் அவரது நண்பர்களுடன் சேர்ந்து, கடந்த 25.10.2022 அன்று, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரை தாக்கினார். அது தொடர்பாக 1 திருவல்லிக்கேணி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் பூகுமாருக்கு கு.விமு.ச பிரிவு 107ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 3 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 1,028 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து இன்று (05.11.2022) உத்தரவிட்டார். அதன்பேரில் பூகுமார் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.