Take a fresh look at your lifestyle.

ரவுடி துப்பாக்கியால் சுட்டு கைது: சினிமா பாணியில் கலங்கடித்த தாம்பரம் காவல் ஆணையரகம்

85

சென்னை சோமங்கலத்தில் சினிமா பாணியில் ரவுடியை கைது செய்யச் சென்ற தனிப்படை காவலரை அரிவாளால் வெட்டிய போது இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோமங்கலம் எருமையூரைச் சேர்ந்த பிரபல ரவுடி சச்சின் (வயது 28). சோமங்கலம் காவல் நிலைய வரலாற்றுப் பதிவேடு ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்குவாரி அதிபர்கள், தொழிலதிபர்களை மிரட்டி மாதா மாதம் ரவுடி மாமூல் வாங்குவதை சச்சின் வழக்கமாக கொண்டிருந்துள்ளான். அதனையடுத்து அவன் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தாம்பரம் துணைக்கமிஷனர் சிபிச்சக்கரவர்த்திக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து சோமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சச்சினைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதனையடுத்து ரவுடி சச்சினை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர்.

அது தொடர்பாக கமிஷனர் அமல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘இன்று அதிகாலை 3.30 மணியளவில் ரவுடி சச்சின் தனது கூட்டாளி பரத்துடன் சோமங்கலம், சாய்ராம் பொறியியல் கல்லூரி அருகில் யமகா பைக்கில் அசுர வேகத்தில் வந்தவனை போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்ற போது ரவுடி சச்சினும், பரத்தும் தங்கள் கையில் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸ் மீது வீசினர். . ஆனால் அது வெடிக்கவில்லை. இதனால் சச்சின் கத்தியை எடுத்து தன்னைப் பிடிக்க பாய்ந்த காவலர் பாஸ்கர் என்பவரை வெட்டினான். இதில் அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சச்சினை சரணடையும்படி எச்சரித்தார். ஆனால் ரவுடி சச்சின் இன்ஸ்பெக்டரை நோக்கி அரிவாளால் வெட்டப்பாய்ந்த போது இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தனது கையில் இருந்த 9 எம்எம் பிஸ்டல் ரக துப்பாக்கியால் 3 முறை சுட்டார். இதில் சச்சினுக்கு வலது கால் தொடையில் 2 குண்டுகள் பாய்ந்தன. ரவுடி வெட்டியதில் காயம் அடைந்த காவலர் பாஸ்கர் மற்றும் ரவுடி சச்சின் ஆகியோர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு தெரிவித்தார். தப்பியோடிய சச்சினின் கூட்டாளி பரத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.