கடந்த 23.08.2022 இரவு 8.45 மணியளவில் தாம்பரம் டூ பீச் ஸ்டேஷன் செல்லும் மின்சார ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர் ஆசிர்வா கண்காணிப்புப் பணியில் இருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அதே பெண்கள் பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது அவரை காவலர் ஆசிர்வா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலர் ஆசிர்வாவின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அந்த நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக மெதுவாக சென்ற வண்டியில் இருந்து குதித்துள்ளார்.
ரத்தகாயத்துடன் பெண் காவலர் ஆசிர்வா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெண் காவலர் கொடுத்த அங்க அடையாளங்களின் அடிப்படையில் அந்த நபரை சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் போலீசார் தேடினர். அதனையடுத்து சென்னை பார்க்டவுன் போஸ்ட் ஆபீஸ் எதிரில் உள்ள மெம்மொரியல் ஹால் அருகே நின்றுக்கொண்டிருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த தனசேகரன் (40) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் பெண் காவலர் ஆசிர்வாவை தாக்கிய நபர் என்பது தெரியவந்தது. அதனையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சென்னை 16வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.