Take a fresh look at your lifestyle.

மோசடி ஆசாமிகளை களை எடுத்த சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் போலீஸ்: ரிவார்டு வழங்கி பாராட்டிய கமிஷனர் சங்கர்ஜிவால்

COP SHANKAR JIWAL REWARDED CHENNAI CRIME BRANCH POLICE

448

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவாலின் நேரடி கட்டுப்பாட்டில், கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் இயங்கி வருகிறது. இங்கு சென்னை நகரில் நடக்கும் மெகாமோசடிகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபடும் ஆசாமிகள் மற்றும் போலி ஆவணம் மூலம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் எனப்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்வதாக வரும் புகார்கள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சென்னைப் பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை இன்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

* போலி நிறுவனம் தொடங்கி மெகா மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது: 188 பவுன், 58 லட்சம் பறிமுதல்

ஜி.பி.ஆர். ரிசோர்ஸ் (GPF Resource Pvt Ltd) என்ற மோசடி நிறுவனம் செயல்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி நடக்காமலேயே அங்கு நடந்தது போல அரசுக்கு கணக்குக்காட்டி கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி மோசடி நடந்திருப்பதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்திய போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

ஜிபிஆர் ரிசோர்ஸ் மோசடி நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களை (Seaways Logistics Pvt. Ltd., Team up Cargo Pvt. Ltd., etc) உண்மையான ஏற்றுமதியாளர் மற்றும் கப்பல் செய்பவராக காட்டிக் கொண்டு தமிழகத்தில் மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ISSGF India Pvt. Ltd., VPC Freight Forwarders Pvt. Ltd., Rushabh Sealink Pvt. Ltd., etc போன்ற சரக்கு அனுப்பும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு வாடகைக்கு கண்டெய்னர்களை அவர்கள் பரிந்துரை செய்யும் போலி நிறுவனங்கள் (Fesa Industries Pvt. Ltd., Zenhawk International, Fedele Express, Revolvy International Pvt. Ltd., Zapo Tribros International’ Pvt Ltd., etc) மூலம் கொள்முதல் செய்து கட்டுமானப் பொருட்களை தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவு, ஜெத்தா ஆகிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

உண்மையில் அப்படியொரு ஏற்றுமதி நடைபெறவில்லை. மேலும், சரக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் ஷிப்பிங் பில்கள், இன்வாய்ஸ், லோடிங் பில் ஆகியவை போலியாக உருவாக்கப்பட்டு எந்த சரக்கும் பரிமாற்றமும் மற்றும் ஏற்றுமதி நடைபெறாமலே, மோசடி செய்யப்பட்டது. மேலும், மோசடியாளர்கள் சுமார் 40 நிறுவனங்களை ROC யில் பதிவு செய்து, கணினிகள், மடிக்கணினிகள் டேப்புகள் மற்றும் மொபைல்களுடன் கூடிய சிறிய பணியிடத்திலிருந்து அஞ்சல் தொடர்பு, தணிக்கை மற்றும் கணக்குகள், GST தாக்கல் போன்ற பணிகளை செய்து வந்தனர். போலி கம்பெனிகள் பெயரில் 61 வங்கி கணக்குகளை தொடங்கி சுமார் 15 சிம் கார்டுகள், 81 டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்கள், ஆகியவற்றை பயன்படுத்தி, இறக்குமதி, ஏற்றுமதியை காகிதத்தில், மட்டுமே செய்து, உண்மையான நிறுவனங்களை ஏமாற்றியுள்ளனர். மேலும் பெரும் வருவாய் உள்ள நிறுவனம் போல காட்டிக் கொள்ள உண்மையான ஏற்றுமதி செய்யாமலே கணக்குகளை காட்டி GST செலுத்தி, வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர் போன்ற தகவல்கள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்ராஜ், டேவிட் (எ) கெவிராஜ், கோகுல்நாத் (எ) டேனியல், பேட்ரிக் மாரி விஜயமுருகப்பா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள், ரொக்கம் ரூ. 58 லட்சத்து 8 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் 188 பவுன் தங்க நகைகள், 4 லேப்டாப், 3 செல்போன்கள், 1 டேப், 6 ஹார்டு டிஸ்க், 2 CPU மற்றும் 15 சிம்கார்டுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 61 வங்கி கணக்குகளும் ரூ. 20 லட்சம் ரொக்கமும் முடக்கம் செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ரூ. 5 கோடிக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்த பெண் உட்பட 11 பேர் கைது

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த அமுதா என்பவர் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் அளித்த புகாரில், ‘‘ஒரு கும்பல், பள்ளி கல்வித்துறை மற்றும் பல அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பல நபர்களிடமிருந்து சுமார் ரூ. 3 கோடிக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் கலாராணி தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நன்மங்கலத்தைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண்மணியை கைது செய்தனர். விசாரணையில் ரேணுகா, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து, தன்னை பள்ளிக்கல்வித்துறையில் உயரதிகாரி போல காண்பித்துள்ளார். மேலும் போலி அடையாள அட்டையை வைத்தும், வேலை தேடும் இளைஞர்களிடம் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இவர் கொடுத்த தகவலின்பேரில், இவரது கூட்டாளிகள் ரஞ்சித், பிச்சாண்டி, ஜித்தேஷ், காந்தி, மோகன்ராஜ், ராஜேந்திரன், ரவிகுமார், சீனிவாசன், மோகனசுந்தரம், மதன்குமார் ஆகிய நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட போலி நியமன ஆணைகள், அடையாள அட்டைகள், மோசடி பணத்தில் வாங்கிய சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், இலகுரக வாகனம், இருசக்கர வாகனம், 25 சவரன் தங்க நகைகள், செல்போன்கள், கணினி, லேப்டாப், போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எதிரிகள் பயன்படுத்திய 35 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.10 லட்சம் பணம் கையகப்படுத்தப்பட்டது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரேணுகா, மோகன்ராஜ் மற்றும் பிச்சாண்டி ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக ரூ 2.5 கோடி மோசடி செய்த 12 பேர் கைது

 

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் (AICTE) பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி, மதுரை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் போன்ற இடங்களில் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்வதாக சென்னையில் உள்ள AICTE, தென்மண்டல அலுவலர் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை ரோடு, பாரண்டபள்ளி கூட்ரோடு அருகிலுள்ள வைஷ்ணவி நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் போலியாக நேர்முக தேர்வு நடத்திக் கொண்டிருந்த 8 நபர்களை கைது செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான, தூத்துக்குடியைச் சேர்ந்த திபாகரன் (எ) மணிகண்டன் (39), திருப்பத்தூரைச் சேர்ந்த சத்யநாராயணன் (26), திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (33), ஓசூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (68) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கார், 30 போலி ஆவணங்கள், 8 அடையாள அட்டைகள் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் திபாகரன் தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட திபாகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஒடிசாவில் கைதான விபசார புரோக்கர்கள்

அப்பாவி பெண்களை கட்டாயப்படுத்தி, பிரபல நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்க வைத்து, சமூக வலைளதளம் மூலம் விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் விபச்சார தரகர்களை கைது செய்ய விபச்சார தடுப்புப்பிரிவு உதவி ஆணையாளர் துரை மேற்பார்வையில், விபச்சார தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கட்குமார் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து காவல் குழுவினர் ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் சென்று ஜோதி ரஞ்சன் ஜெனா (எ) ராகுல், கிருஷ்ணா சந்திரா ஸ்வைன் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில் ஜோதி ரஞ்சன் ஜெனா (எ) ராகுல் மற்றும் கிருஷ்ணா சந்திரா ஸ்வைன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக அப்பாவி பெண்களை நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சர்வீஸ் அடுக்கமாடி குடியிருப்புகளில் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

மேலும் சமூகவலைதளம் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து, இணைய வழியில் பணம் பெற்று விபச்சார தொழில் செய்து வந்ததும் மேலும், அப்பாவி பெண்களை அடிக்கடி இடம் மாற்றியும், தங்களது பெயர்களை சாம் (எ) ராகுல் (எ) ரோகன் ராகுல் (எ) மனோஜ் (எ) சம்ஷத்ஷா (எ) ராஜ் (எ) ஜோதி ராவ் என வெவ்வேறு பெயர்களில் மாற்றம் செய்து, எதிரிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு விபச்சார தொழில் செய்தும் வந்துள்ளனர். மேலும் கடந்த 5 வருடங்களாக இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில், சென்னை, விபச்சார தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், எதிரிகள் இருவர் மீதும், ஏற்கனவே விபச்சார தடுப்புப் பிரிவில் சுமார் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜயா மனோகர் என்பவர் சென்னை பள்ளிக்கரணை கரிமத்தில் உள்ள தனக்கு சொந்தமான 25 சென்ட் இடத்தினை அழகு சுந்தரம் மற்றும் ராஜாபாதர் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணம் பதிவு செய்து கொடுத்தது போல போலி ஆவணங்கள் தயாரித்து சொத்தை அபகரித்துள்ளார். இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2007ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, சைதாப்பேட்டை 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கானது 2013ம் ஆண்டு அல்லிக்குளம் பெருநகர குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவடைந்து 10.5.2022 தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் அழகுசுந்தரம் என்பவருக்கு 368 பிரிவின் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 -அபராதமும், பிரிவு 420ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதமும் பிரிவு 471ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் இவையனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 2வது எதிரி ராஜா பாதர் என்பவருக்கு 368ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் விதித்து, மேலும் எதிரி அழகுசுந்தரம் புகார்தாரரின் வாரிசுகளுக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடாக 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

இந்த வகையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த மேற்படி மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (04.06.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.