நெல்லை, மேலப்பாளையத்தில் ரிபாஈ நாயகத்தின் வருடாந்திர பெரிய ராத்திபு திக்ர் மஜ்லிஸ் நிகழ்ச்சி 16.12.2022 அன்று விமரிசையாக நடக்கவுள்ளது.
Hazrath Ahamed kabeer Refai Raliyallahu Anhu, darga shareef, basara, ERAQ.
இறைத்துாதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 18வது தலைமுறையில் முத்தாக வந்துதித்த செய்யிது அஹ்மது கபீர் ரிபாஈ நாயகம் ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 512 (கி.பி. 1107) ரஜபு பிறை 27–ல் ஈராக் நாட்டில், பசரா என்ற ஊரில் தோன்றினார்கள். பெற்றோர் சையத்அலி அபுல் ஹசன் – பாத்திமா அல் அன்சாரி. தனது உடல் பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்காக தியாகம் செய்த அஹ்மது கபீர் ரிபாஈ நாயகம் ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் கி.பி. 1183ம் ஆண்டு, ஹிஜ்ரி 578, ஜமாத்துல் அவ்வல் பிறை 22ல் இப்பூலகை விட்டு மறைந்தார்கள்.
ஈராக்கில் தோன்றிய ரிபாஈ நாயகம் (ரழி) அவர்களது தரீக்கா இன்று உலகம் முழுவதும் புகழோங்கி விளங்குகிறது. தென்னிந்தியாவில் பெங்களூரு, டில்லி, மும்பை உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. அந்த வகையில் நெல்லை மேலப்பாளையத்தில் ரிபாஈ ஆண்டவர்களின் தலைமை பீடமாக அங்குள்ள வெள்ளை கலீபா சாஹிபு தெருவில் ரிபாஈ நாயகத்தின் உன்னத நினைவிடம் கடந்த 250 ஆண்டுகளுக்கும் மேலாக ரிபாஈ தரீக்கா தழைத் தோங்கி விளங்குகிறது. ரிபாஈ நாயகம் இப்பூலகை விட்டு மறைந்த தினமான ஜமாத்துவல் அவ்வல் பிறை 22 அன்று ரிபாஈ ஆண்டவர்கள் ரழியல்லாஹ் அன்ஹு அவர்களது நினைவு தினமாக கந்தூரி வைபவம் வெகு விமரிசையாக நடக்கிறது.
ஹாஜி வெள்ளை கலீபா ஹம்ஸா ஸாஹிப் செய்யிது ஹவ்துல்லாஷா ரிபாஈ
இந்த ஆண்டும் ரிபாஈ நாயகத்தின் பெரிய ராத்திபு திக்ர் மஜ்லிஸ் என்னும் ஆன்மிக நிகழ்வு மேலப்பாளையத்தில் 16.12.2022 (ஜமாத்துல் அவ்வல் பிறை 21 பின்னேரம், பிறை 22 இரவு) நடக்கவுள்ளது. அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நடக்கும் மஜ்லிசில் அல்லாஹ்வை புகழும் திக்ர் மற்றும் ரிபாஈ ஆண்டவர்களின் புகழ் மாலை மற்றும் பக்கீர்மார்களின் காதிரிய்யா குத்தும் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. இந்த கந்தூரி வைபவம் ரிபாஈ தரீக்காவின் தலைவர் ரிபாஈ மவுலானா வெள்ளை கலீபா ஹாஜா முயினுத்தீன் செய்யது அஹ்மதுல்லாஷா சர் கலீபத்துர் ரிபாஈ அவர்களின் குமாரர் ஹாஜி வெள்ளை கலீபா அமீர் ஹம்ஸா ஸாஹிப் செய்யிது ஹவ்துல்லாஷா ரிபாஈ அவர்களது தலைமையில் இனிதே நடக்கிறது. நெல்லை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான இஸ்லாமியர்கள் இந்த விழாவில் திரளாக கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.