சென்னை, கோயம்பேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விலையுயர்ந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் மற்றும் வீலிங் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடாமல் தடுக்க சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் குழுவினருடன் இணைந்து, சட்டம் & ஒழுங்கு மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் சென்னை பெருநகரில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து, பைக் ரேஸ் மற்றும் வீலிங் என்ற பெயரில் இருசக்கர வாகனத்தில் அபாயகரமாக செல்லும் நபர்களை கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (04.04.2022) காலை கோயம்பேடு 100 அடி சாலை, நெசப்பாக்கம் புதிய மேம்பாலத்தில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதாகவும், வீலிங் என்ற பெயரில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதனையடுத்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஆஷிக் உசேன் (வயது 18) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சாகத்திற்கு பயன்படுத்திய Yamaha R15 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ஆஷிக் உசேன் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வதும், இதை செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் எதிரி ஆஷிக் உசேன் இன்று (05.4.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.