சென்னை ஐயப்பன்தாங்கலில் மெடிக்கல் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ. 63.44 லட்சம் மோசடி செய்த நபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை, ஐயப்பன்தாங்கல், அண்ணா நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது 49). இவர் ர் தனது மூத்த மகனை மருத்துவ படிப்பு படிக்க வைக்க விரும்பியுள்ளார். அதற்காக மெடிக்கல் சீட்டுக்காக முயற்சி செய்த சமயத்தில் இவரது மனைவியின் தம்பி ராமநாதன் மூலமாக முருகன் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக டாக்டர் பினு என்பவர் கர்நாடாகவிலுள்ள மணிபால் யுனிவர்சிட்டியில் மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதன் பேரில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் பல தவணைகளில் ரூ. 63 லட்சத்து 44 ஆயிரம் பணத்தை முருகனிடம் கதிரவன் நேரடியாகவும் வங்கி கணக்கு மூலமாகவும் கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்டு தனது மகனுக்கு மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தராமல் டாக்டர் பினு மற்றும் முருகன் ஆகியோர் ஏமாற்றியுள்ளார். அது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கதிரவன் சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் நேரடியாக புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (63) என்பவரை இன்று கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.