புளியந்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்து 22 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 1.47 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை, புளியந்தோப்பு, போலு நாயக்கன் தெருவில் சாந்தா (68) என்ற பெண் தனியாக வசித்து வருகிறார். கடந்த 19.01.2023 அன்று இரவு மேற்படி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று, மறுநாள் (20.01.2023) காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.1.55 இலட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சாந்தா கொடுத்த புகாரின்பேரில், புளியந் தோப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புளியந்தோப்பு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழு வினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட புளியந் தோப்பு, அம்மையம்மாள் தெருவைச் சேர்ந்த கோவிந்த் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 22 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.1.47 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கோவிந்த், சாந்தாவின் வீட்டில் ஏற்கனவே வாடகைக்கு இருந்ததும், அந்த பழக்கத்தில் கோவிந்த் அடிக்கடி புகார்தாரர் சாந்தாவின் வீட்டிற்கு சென்று வந்துள்ள நிலை யில், கோவிந்த், 19.01.2023 அன்று இரவு சாந்தாவின் வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டி யிருந்ததை கண்டு, வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கோவிந்த் மீது யானைகவுனி பகுதியில் வெள்ளி கொலுசு கடையின் பூட்டை உடைத்து வெள்ளி கொலுசுகள் திருடிச் சென்றது தொடர்பாக ஏற்கனவே யானைக்கவுனி காவல் நிலையத்தில் 1 வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரி கோவிந்த் விசாரணைக்குப் பின்னர் இன்று (22.01.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.