வங்கியில் ஐந்தாயிரம் கடன் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று மூதாட்டிகளிடம் தங்க நகை, ரொக்கப்பணம் ஆகியவற்றை அபேஸ் செய்த பலே நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அயனாவரம், என்எம்கே தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 80)
. அதே பகுதி ஆழ்வார் சோமசுந்தரம், 4வது தெருவைச் சேர்ந்தவர் மைதிலி (வயது 75). இருவரும் முதியோர் பென்சன் பெறக்கூடியவர்கள். நேற்று இருவரும் முதியோர் பென்ஷன் வாங்கிவிட்டு, அயனாவரம் மேட்டுத் தெரு, என்எம்கே சந்திப்பு அருகிலுள்ள குவாலிட்டி சிக்கன் சென்டர் முன்பு அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சைக்கிளில் வந்தார். மூதாட்டிகளின் அருகில் வந்து வங்கியில் பணம் ஐந்தாயிரம் லோன் தருவதாகவும் அதற்கான டோக்கன் தான் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த லோனை உங்கள் இருவருக்கும் வாங்கித்தருகிறேன் என தனலட்சுமியிடமும், மைதிலியிடமும் லாவகமாக பேசி ஆசை வார்த்தை காட்டியுள்ளார். அதை உண்மை என நம்பிய இரண்டு மூதாட்டிகளும் அவருடன் சென்றனர். செல்லும் வழியில் நீங்கள் தங்க நகை அணிந்து இருந்தால் வங்கியில் லோன் தர மாட்டார்கள் அதனால் அதனை கழற்றி என்னிடம் கொடுங்கள் என கேட்டுள்ளார். உடனே இருவரும் தாங்கள் அணிந்திருந்த முக்கால் பவுன் கம்மல் மற்றும் 3 பவுன் தங்கச்செயின், 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அந்த நபரிடம் கொடுத்தனர். பின்னர் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நடந்தே சென்று சிறிது தூரம் சென்ற பின்பு சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார். அப்போதுதான் அந்த நபர் ஏமாற்றுப் பேர்வழி என்று இரு மூதாட்டிகளுக்கும் தெரியவந்தது. அது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்துள்ளனர்.