சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி., காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித் தோம். தேர்தல் பிரச்சாரத்துக்கு மு.க.ஸ்டாலின் அவசியம் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவரும் வருவதாக சொன்னார். எங்களை பொறுத்தவரை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே ‘கை’ சின்னத்துக்கு கடந்த 3, 4 நாட்களாக தி.மு.க. அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, காங்கிரஸ் தொண்டர்களும், தி.மு.க. தொண்டர்களும் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்ததற்கு எங்களது நன்றியை தெரிவித் தோம். இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி, முஸ்லீம் லீக் இயக்கத்தை சார்ந்தவர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை சந்திப்பதோடு கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனிடமும் பேசி உள்ளோம். எல்லா கூட்டணி கட்சியை சார்ந்தவர்களையும் நாங்கள் சந்திப்போம். ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. ஏனென்றால் தி.மு.க. கூட்டணி என்பது வலுவான கூட்டணி. அதுமட்டுமல்ல தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் காவலாக, இருக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கண்டிப்பாக அவருடைய நல்லாட்சிக்காக இந்த கூட்டணிக்கு ‘கை’ சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்கள். காங்கிரஸ் மேலிடம் நான் போட்டியிட விரும் பியது. அதனால் கூட்டணி கட்சியை சார்ந்தவர்களும் மற்றவர்களும் விரும்பிய காரண த்தால், குறிப்பாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கேவும் சொல்லிய காரணத்தால் அவர்கள் என் மீது வைத்திருக்கிற நம்பிக்கைக்கு நான் அடிப்பணிய வேண்டும். கண்டிப் பாக மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் பேரியக்கத்துக்கு தேடித் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
வைகோ, கமலுடன் சந்திப்பு
வைகோ, திருமாவளவன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு கோரினார். எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் வைகோவை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது வேட்பாளராக இளங்கோவனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று வைகோ கூறினார். பிரச்சாரம் மேற்கொள்ள வைகோவிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று ஈ.வி.கே.எஸ். பின்னர் நிருபர்களிடம் கூறினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசனை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்தார். கமலுக்கு பொன்னாடை அணிவித்து, கைக்குலுக்கி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ. அசன் மவுலானா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். கமல்ஹாசன் எங்களை வரவேற்றதிலிருந்து அவர் எங்களுக்கு கண்டிப்பாக ஆதரவு தருவார் என்று நம்புவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.