சென்னை மருந்துக்கடைக்காரருக்கு நடந்த அதிசயம்!
சென்னை நகரில்ஒரு இஸ்லாமியருக்கு ஆங்கில மருந்துக்கடை ஒன்று இருந்தது. அவரது கடையில் சென்னையைச் சேர்ந்த டாக்டர்கள் பலர் வந்து மருந்து வாங்குவது வழக்கம். அவர்களில் டாக்டர்ஷெய்ஹு தாவுது என்பவரும் ஒருவர். அவர் தனது பெயர் ஷெய்ஹூ தாவுது என்றும் தனது ஊர் முத்துப்பேட்டை என்றும் முகவரி கொடுத்திருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக அந்த கடையில் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். ஒரு நாள் அந்த இஸ்லாமிய மருந்துக்கடைக்காரர் முத்துப்பேட்டையில் உள்ள தனது நண்பன் வீட்டுக்குச் செல்ல விரும்பினார். சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் முத்துப்பேட்டைக்குச் சென்றார். அவர் நண்பனின் வீட்டில் தங்கியிருந்தபோது தனது கடையில் வாடிக்கையாக மருந்து வாங்கும் ஷேக் தாவுது பற்றியும் அவரது வீடு இங்கே எங்கே உள்ளது என்பது பற்றியும் கேட்டுள்ளார்.
இங்கு ஷெய்ஹுதாவுத் என்ற பெயரில் எந்த ஒரு டாக்டரும் இல்லை என்று நண்பன் கூறினான். அவர் தனது கடைக்கு 15 ஆண்டுகளாக வந்து போவதாகவும், பெருமளவு மருந்துகள் எடுத்துச் செல்வதாகவும், தனது முகவரி முத்துப்பேட்டை என்று சொன்ன தாகவும் கூறினார். அதற்கு அந்த நண்பன் நான் முத்துப்பேட்டையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். இங்கு ஷெய்கு தாவுத் என்ற பெயரில் எந்த ஒரு டாக்டரும் இல்லை.
ஆனால் ஷெய்ஹு தாவுத் வலிய்யுல்லாஹ் என்ற ஒரு மஹான் இங்கே சமாதி கொண்டுள்ளார்கள். அவர்கள் ஒருமாபெரும் வைத்தியமேதை என்று வரலாறுகள் கூறுகின்றன. அவர்களின் தர்காவுக்கு பல நோயாளர்கள் வந்து கனவிலும், விழிப்பிலும் சிகிச்சை பெற்று செல்வார்கள். உங்களின் கடைக்கு டாக்டர் ரூபத்தில் அவர்கள் வந்திருக்கலாம் என்று கூறினார். இதைக் கேட்ட அந்த மருந்துக்கடைக்காரர் ஆச்சர்யப்பட்டு அந்த கணமே ஷெய்ஹு தாவுத் வலிய்யுல்லாஹ் அவர்களின் தர்காவுக்கு விரைந்து சென்றார். அங்கே ஷெய்ஹு தாவுத் வலியுல்லாஹ்வின் சமாதி முன் நின்று ஸலாம் கூறும் முன்பு, ‘‘நீ தேடும் ஷெய்ஹுதாவுத் நான் தான்’’ என்று ஓர் அசரீரி குரல் கணீர் என கேட்டது. அவ்வளவுதான் கடைக்காரர் அந்த கணமே மயக்கமுற்று கீழே விழுந்தார். சில நிமிடங்களின் பின் தெளிவுபெற்று நடத்தை அங்கு கூடி நின்றவர்களிடம் கூறினார். ஷெய்ஹு தாவுத் வலியுல்லாஹ்வின் கராமத்துக்களில் இது மிகவும் அதிசயிக்கத்தக்க விஷயமாக முத்துப்பேட்டை மக்கள் கூறுகின்றனர்.
– கலீபா செய்யது ஆஷிக்குல்லாஷா ரிபாஈ