அமெரிக்க டாக்டருக்கு காரணம் காட்டிய
முத்துப்பேட்டை ஷேக்தாவுது வலியுல்லாஹ்...
அமெரிக்காவில் மிகப்பிரசித்தி பெற்றமருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நிபுணராக வேலை செய்து கெண்டிருந்த ஒரு வெள்ளைக்கார டாக்டரின் முகத்தில் மச்சம் போன்ற கறுப்புப் புள்ளி ஒன்று ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல அது முகம் முழுவதும் படரத்தொடங்கியது. அவரின் அழகிய முகத்தை அது அசிங்கப்படுத்தியது. அவருடன் வேலை செய்து கொண்டிருந்த ஏனைய டாக்டர்கள் அவரை ஏளனம் செய்யத் தொடங்கினர். இதனால் மனமுடைந்த அவர் தன்னைவிட அனுபவத்திலும், வயதிலும் கூடிய வைத்திய நிபுணர்களிடம் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு சுகம் கிடைக்கவில்லை.
ஒருநாள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பண்டைய வரலாற்று நூலை வாசித்தார். அதில் இந்தியாவில், தமிழ்நாட்டில் முத்துப்பேட்டை எனும் கிராமத்தில் தீராத நோய்களை சுகப்படுத்தும் வைத்திய மேதை ஒருவர் இருக்கிறார் என்ற குறிப்பு எழுதப்பட்டிருந்தது. இதைக்கண்ட அந்த டாக்டர் வியப்படைந்தவராக அமெரிக்காவில் இன்னொரு மருத்துவமனையில் சிகிச்சை நிபுணராக வேலை செய்து கொண்டிருந்த தனது இந்திய நண்பரை நேரில் சென்று சந்தித்தார். அவருக்கு இந்தியாவின் டில்லி சொந்த ஊர். அவரிடம் அந்த ஆங்கில நுாலில் இருந்த முத்துப்பேட்டை மகான் பற்றி விசாரித்துள்ளார். அதற்கு அவர் தானும் அப்படி ஒரு வைத்தியமேதை இருப்பதாக கேள்விப்பட்டதாகவும் வேறு விபரம் ஒன்றும் தனக்கும் தெரியாது என்றும் கூறினார்.
இருவரும் இந்தியாவுக்குச் சென்று அந்த வைத்திய மேதையைக்காண வேண்டுமென்று முடிவு செய்து விமானம் மூலம் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வந்தனர். இங்குள்ள இஸ்லாமியர்கள், தர்காக்களுக்கு சென்று முத்துப்பேட்டை மகான் பற்றியும் அது உள்ள இடம் பற்றியும் விசாரித்தனர். அப்போது ஷெய்ஹு தாவுத் வலியுல்லாஹ் அவர்களைப் பற்றி அவர்களுக்கு விரிவான விளக்கம் கிடைத்தது. இருவரும் நாகப்பட்டினத்தில் உள்ள முத்துப்பேட்டைக்கு வந்து ஷெய்ஹு தாவுது நாயகம் அவர்களின் தர்காவுக்கு சென்றனர். பணிவோடும், பக்தியோடும் மனம் உருக பிரார்த்தனை செய்து விட்டு அன்றிரவு அங்கேயே உறங்கினார்கள்.
அதே இரவு நோயாளியான டாக்டரின் கனவில் தோன்றிய ஷெய்கு தாவுத் நாயகம் அவர்கள் தனது சமாதியில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் உள்ள எண்ணை கொண்டு நோயுள்ள இடத்தில் பூசுமாறு பணித்தார்கள். கண் விழித்த டாக்டர் நாயகம் அவர்கள் சொன்னபடியே செய்தார். அன்று மாலைக்குள் அவரது முகத்தில் இருந்த அந்த கருப்புப் புள்ளி மறைந்து போய் விட்டது. இது கண்டு வியந்து இரு மருத்துவ நிபுணர்களும் நாயகம் அவர்களின் சமாதியில் விழுந்து முத்தங்கள் சொரிந்து, தம்மால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்கிவிட்டுகண்ணீருடன் நன்றி தெரிவித்து விட்டுச் சென்றனர்.
– கலீபா செய்யது ஆஷிக்குல்லாஷா ரிபாஈ