Take a fresh look at your lifestyle.

முத்தமிழையும் வளர்க்கிறது தி.மு.க.: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

70

இயல் இசை நாடகம் என்ற முத்தமிழை தி.மு.க. ஆட்சி வளர்க்கிறது என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் பேசினார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதீய பவனில் 43-வது வழுவூரார் நாட்டியம் இசை விழா நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றி தழ்களை வழங்கினார். மேலும் வழுவூரார் விருதை கன்னியா குமரிக்கு வழங்கினார்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இசைக்கும் நாட்டியத்திற்கும் தொண்டாற்றிய ஒரு குடும்பமாக வழுவூராருடைய குடும்பம் விளங்கிக் கொண்டி ருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்று சொன்னால், மாமன்னன் ராசராசசோழனின் மகள் குந்தவைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த பாரம்பர்யம் வழுவூராரின் பாரம்பர்யம், தொண் டாற்றிக் கொண்டு இருக்கக்கூடிய குடும்பம் தான் வழுவூராரின் குடும்பம். மூத்த மகன், ‘நாட்டிய கலா சாம்ராட்’ என்று போற்றப்பட்ட, சாம்ராஜ். அதேபோல், இளைய மகன், இசை மற்றும் திரையுலகக் கலைஞரான மாணிக்க விநாயகம். குறிப்பாக, சாம்ராஜின் வெண்கலக் குரலை, கலைஞர் அதிகம் விரும்பினார். கலைஞருடைய சங்கத்தமிழை இசைக் கோவையாக ஆக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டவர் சாம்ராஜ்.

நாட்டியப் பேரொளி பத்மினி, பத்மா சுப்பிரமணியம், வைஜெயந்தி மாலா, சித்ரா விஸ்வேஸ்வரன் என அவர் உருவாக்கிய கலைஞர்களும் மாபெரும் கலைஞர்களாக நாட்டிலே வலம் வந்தவர்கள். இப்படி கலைஞர்களை உருவாக்கக் கூடிய பரந்த உள்ளமானது அனைவருக்கும் வந்தாக வேண்டும். இதில் வழுவூரார் குடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் நானும் நன்றி சொல்லக்கூடிய நிலையில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஏனென்றால் இங்கே குறிப்பிட்டதைப் போல என்னுடைய மகள் செந்தாமரை – நாட்டிய கலா சாம்ராட் கலைமாமணி வழுவூர் சாம்ராஜிடம் நாட்டியம் கற்றவர் என்பதை இங்கே சொன்னார்கள், அதிலே எனக்கு உள்ளபடியே பெருமை.

அன்றைய நாள் சிறப்பாக செந்தாமரை நாட்டியம் ஆடினார் என்று சொன்னால், அவரை மிகச் சிறப்பாக பயிற்றுவித்தவர் தான் ஆசிரியர் சாம்ராஜ் என்பதுதான் உண்மை. தான் என்ன எதிர்பார்க்கிறாரோ, அதனை மாணவர்களிடம் கொண்டு வந்துவிடக் கூடிய ஆற்றலைப் பெற்றவராக அவர் விளங்கினார். பழைய பாடல்களை வைத்தே நாட்டியங்களை நடத்திக் கொண்டிருந்த காலத்தில், தமிழ் இலக்கியப் பாடல்களைப் புகுத்தி, அதற்கென நாட்டிய அசைவுகளை உருவாக்கி தமிழ்த் தொண்டாற்றியவர் வழுவூரார். நாட்டிய மேடைகளைத் தாண்டி திரைத்துறையிலும் முத்திரை பதித்தார். மீரா திரைப்படத்தில் இடம்பெற்ற நடனக் காட்சிகள் அவர் அமைத்ததுதான். இவர் வாங்காத விருதுகள் இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு விருதுகளைப் பெற்றார்.

இசைப் பேரறிஞர் விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ, கலைமாமணி என அனைத்து விருதுகளையும் பெற்றவர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலைகள் என்பவை தமிழ்ப் பண்பாட்டைக் காலம் காலமாக வளர்த்தெடுக்கும் பணியைச் செய்து வருகின்றன. தமிழும் – தமிழ்நாடும் பல்லாயிரம் ஆண்டு காலம் நின்று நிலைக்க இத்தகைய கலை இலக்கியங்கள் தான் அடிப்படையான காரணம். இந்திய விடுதலைக் காக வழுவூரார் நாட்டியக் கலையை அன்றே பயன்படுத்தியதைப் போல இன்று இருப்பவர்களும் தமிழைக் காக்கவும், தமிழ்நாட்டைக் காக்கவும் தங்கள் கலையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புதிய புதிய கலைஞர்கள் உருவாகுவதைப் போல புதிய புதிய பாடல்களும் இந்த மேடைகளில் ஒலிக்க வேண்டும். நவீனக் கலையில் நவீனக் கருத்துகள் – அறிவுப்பூர்வமான கருத்துகள், பகுத்தறிவுக் கருத்துகள் – சமூக மேன்மைக்கும் மக்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் இடம் பெற வேண்டும். நவீன வடிவங்களை மட்டுமல்ல, நவீன எண்ணங்களையும் இந்தக் கலையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மயிலை த.வேலு எம்.எல்.ஏ., சென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, இந்து குழுமத்தின் இயக்குனர் என்.ரவி, டாக்டர் நல்லி குப்புசாமி, பாரதிய வித்யா பவன் இயக்குனர் கே.என்.ராமசாமி, கிளவ்லேண்ட் வி.வி. சுந்தரம், வழுவூரார் பரதநாட்டிய அகாடமியின் செயலாளர் வழுவூர் சாமராஜன் குமாரன், முன்னாள் நீதியரசர் வாசுகி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.