Take a fresh look at your lifestyle.

முதியோர் உதவித் தொகையை நிறுத்திய தி.மு.க. அரசு: எடப்பாடி குற்றச்சாட்டு

66

அண்ணா தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

சேலம் மாவட்டம் வேலகவுண்டன்புதூரில் இலவச முதியோர் இல்லத்தை அண்ணா தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: ‘‘அண்ணா தி.மு.க.வின் பாரம்பரியத்தைப் பார்கின்றபோது, அண்ணாவு க்கு குழந்தைகள் கிடையாது. எம்ஜிஆருக்கு குழந்தைகள் கிடையாது. ஜெயலலிதா வுக்கு குழந்தைகள் கிடையாது. நாம்தான் அவர்களுடைய குழந்தை கள். அவர்களுடைய வாரிசுகளாக இருந்து அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். தி.மு.க.வைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட நிகழ்ச்சியை எங்கேயுமே தொடங்கி வைத்திருக்க மாட்டார்கள். அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் தான் ஏழைகளுக்கு நன்மை செய்து அதன்மூலம் இறைவனுடைய அருளைப் பெறுகின்றனர்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் மாதம் ரூ.1000 முதியோர் உதவித் தொகையை வழங்கினார். அவருடைய மறைவுக்குப் பின்னர், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித் தொகை கிடைக்கப்பெறவில்லை என்று கேள்விப்பட்டவுடன், சட்டமன்ற விதி 110ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற தகுதியான 5 லட்சம் முதியோருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். இதன்மூலம் 4.50 லட்சம் பேர் பயன் அடைந்தனர். ஆனால், இன்றைய முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், உழைக்கும் திறனற்ற ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை நிறுத்தியது” என்று அவர் பேசினார்.

விழாவில் கழக அமைப்புச் செயலாளர் செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மணி, சுந்தர்ராஜன், ஜெய்சங்கரன், ராஜமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றியம் மற்றும் பேரூர், நகரக் கழகச் நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.