நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று மாலை 6 மணிக்கு தோள் சீலை மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் பங்கேற்கிறார்கள். மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.
நாகர்கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். தோள் சீலை போராட்ட 200-வது மாநாட்டில் 2 முதலமைச்சர்கள் பங்கேற்பதால் நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா திடல் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் விழா மேடை மற்றும் மைதானத்தை ஆய்வு செய்தனர். மாநாட்டையொட்டி இன்று நாகர்கோவில் நாகராஜாதிடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வருகிறார். இதுபோல தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் இருந்து காரில் நாகர்கோவில் வருகிறார். தோள் சீலை போராட்ட மாநாடு முடிவடைந்த பின்னர் அவர் இன்று இரவு நாகர்கோவிலில் தங்குகிறார். இதனால் அவர் தங்கும் விருந்தினர் மாளிகையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.