Take a fresh look at your lifestyle.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வீரர்கள் சுப்மான் கில், புஜாரா சதம்:

116

சட்டோகிராமில் நடந்து வரும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சுப்மான் கில், புஜாராவின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 404 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்களுடன் பரிதவித்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று வங்காளதேசம் எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. எபாதத் ஹூசைன் 17 ரன்னிலும், மெஹிதி ஹசன் மிராஸ் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் வங்காளதேசத்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத இந்தியா 254 ரன்கள் முன்னி லையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் லோகேஷ் ராகுலும், சுப்மான் கில்லும் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து பிரிந்தனர். ராகுல் 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து சுப்மான் கில்லுடன், புஜாரா இணைந்தார். அதிரடியான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்திய சுப்மான் கில் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டார். எபாதத் ஹூசைன், ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் காயத்தால் 2-வது இன்னிங்சில் பந்து வீசாதது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மேலும் சாதகமாக அமைந்தது.

அபாரமாக ஆடிய சுப்மான் கில் சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு முதலாவது சதம் ஆகும். அதைத் தொடர்ந்து மெஹிதி ஹசனின் பந்து வீச்சில் சிக்சர் விளாசிய சுப்மான் கில் (110 ரன், 152 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) மீண்டும் சிக்சருக்கு முயற்சித்து கேட்ச் ஆகி அவுட்டானார். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலி களம் இறங் கினார். மறுமுனையில் ஆரம்பத்தில் நிதானம் காட்டிய புஜாரா முதல் 50 ரன்களை எடுக்க 87 பந்துகளை செலவிட்டார். அதன் பிறகு துரிதமான ரன்வேட்டையில் ஈடுபட்ட புஜாரா அடுத்த 52 ரன்களை 43 பந்தில் எடுத்து விட்டார். பவுண்டரியுடன் தனது 19-வது சதத்தை புஜாரா பூர்த்தி செய்தார். கடைசியாக 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெஸ்டில் சதம் கண்டிருந்த புஜாரா அதன் பிறகு 51 இன்னிங்ஸ்க்கு பின்னர் சதம் அடித்துள்ளார்.

புஜாரா சதத்தை கடந்ததும் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக கேப்டன் லோகேஷ் ராகுல் அறிவித்தார். இதன்படி இந்தியா 2-வது இன்னிங்சில் 61.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா 102 ரன்களுடனும் (130 பந்து, 13 பவுண்டரி), விராட் கோலி 19 ரன்களுடனும் (29 பந்து) களத்தில் இருந்தனர். இதன் மூலம் வங்காளதேச அணிக்கு 513 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த டெஸ்டில் மெகா இலக்கை வழங்கியுள்ள இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.