Take a fresh look at your lifestyle.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து

119

ராவல் பிண்டியில் நடந்த பரபரப்பான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 657 ரன்களும், பாகிஸ்தான் 579 ரன்களும் குவித்தன. அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுடன் துணிச்சலாக ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. இமாம் உல்-ஹக் (43 ரன்), சாத் ஷகீல் (24 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் மேற்கொண்டு 263 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று பாகிஸ்தான் தொடர்ந்து பேட்டிங் செய்தது. சிறிது நேரத்தில் இமாம் உல்-ஹக் 48 ரன்னில் கேட்ச் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு சாத் ஷகீலும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் கைகோர்த்து பாகிஸ்தானுக்கு ஓரளவு வலு சேர்த்தனர். 20 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த இந்த ஜோடி முக்கியமான தருணத்தில் பிரிந்தது. ஸ்கோர் 176 ஆக உயர்ந்த போது, ரிஸ்வான் (46 ரன்) ஆண்டர்சனின் பந்து வீச்சுக்கு இரையானார். சாத் ஷகீலை (76 ரன், 159 பந்து) ஆலி ராபின்சன் காலி செய்தார். இதன் பின்னர் விரலில் ஏற்பட்ட காயத்தால் முந்தைய நாள் வெளியேறிய அசார் அலியும், அஹா சல்மானும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இவர்கள் ஆடிய விதம் மறுபடியும் பாகிஸ்தானுக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொண்டு வந்தது. தேனீர் இடைவேளைக்கு பிந்தைய பகுதியில் 41 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 86 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் பரபரப்பு எகிறியது. ஆனால் அஹா சல்மான் (30 ரன்), அசார் அலி (40 ரன்) ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் அடுத்தடுத்து வெளியேற்றி எதிரணியின் நம்பிக்கையை சீர்குலைத்தார்.

இதையடுத்து கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் அணியை தோல்வியின் பிடியில் இருந்து காப்பாற்ற தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேன்களை சுற்றி அரண் போல் பீல்டர்களை நிறுத்தி அதற்கு ஏற்ப பந்து வீச வைத்து மிரட்டினார். ஜாகித் மமூத் (1 ரன்), ஹாரிஸ் ரவுப் (0) இருவரையும் ஒரே ஓவரில் ஆண்டர்சன் வீழ்த்தினார்.

10-வது விக்கெட்டுக்கு நசீம் ஷாவும், முகமது அலியும் இணைந்து எஞ்சிய நேரத்தை கடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். 8 ஓவர்களை திறடம்பட சமாளித்த இவர்கள் ஆட்ட நேரம் நெருங்கிய தருவாயில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நசீம் ஷா (6 ரன், 46 பந்து), ஜாக் லீச்சின் சுழற்பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. முடிவில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 96.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-?0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த வெற்றிக்கு இங்கிலாந்துக்கு 12 புள்ளிகள் கிடைத்தது.