Take a fresh look at your lifestyle.

முதலாம் குலோத்துங்க சோழனின் படை போன்று காட்சியளிக்கின்றது எஸ்ஐக்கள் பயிற்சி நிறைவு விழாவில் ஏடிஜிபி அமல்ராஜ் பேச்சு

tamil nadu police training acadamy director amalrak ips speech

117

பயிற்சி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களின் அணிவகுப்பு முதலாம் குலோத்துங்க சோழனின் படை போன்று காட்சியளிப்பதாக 927 எஸ்ஐக்கள் பயிற்சி நிறைவு விழாவில் தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியக இயக்குநர், கூடுதல் டிஜிபி அமல்ராஜ் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரயில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் பயிற்சி பெற்ற 927 எஸ்ஐக்களின் பயிற்சி நிறைவு விழாவில் அதன் இயக்குநர் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் ஆற்றிய நிறைவு உரையில் கூறியதாவது, “பார் சிறுத்ததால், படை பெருத்ததோ… படை பெருத்ததால், பார் சிறுத்ததோ…” என்று
கலிங்கப் போர் வெற்றிப் படை குறித்து ஜெயங்கொண்டாரால் கலிங்கத்துப் பரணியில் போற்றப்பட்ட முதலாம் குலோத்துங்க சோழனின் படை போன்று காட்சியளிக்கின்றது இங்கே…இன்று… இப்படை… கடந்த ஒருவருட அடிப்படை பயிற்சியில் ஒரு சிறந்த அதிகாரிக்கு தேவையான அறிவுத் திறன்கள், ஆளுமைப் பண்புகள், சட்ட நுணுக்கங்கள், நுண்ணறிவுத் திறன்கள், அதிகார வழிமுறைகள், கணினி பயன்பாட்டுத் திறன்கள் என பல்வேறு பயிற்சிகளில் கற்றுத் கைதேர்ந்து இந்த காவல் உயர் பயிற்சியகத்தில் காலடி வைத்தவர்கள் இன்று அதிகாரிகளாக நம் முன் கம்பீரமாக காட்சித் தருகின்றனர். 927 பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு என்பது

இந்த துடிப்புமிக்க இளம் அதிகாரிகளின் செயல்திறனின் வெளிப்பாடு. இவர்கள் பெற்ற பல்வகைப் பயிற்சிகளின் வெளிப்பாடு. இவர்கள் தங்கள் மேல் கொண்டுள்ள கட்டுப்பாட்டின் வெளிப்பாடு. சவால்களை சாதனைகளாய் மாற்றத் துடிக்கும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. தங்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் மனவுறுதியின் வெளிப்பாடு. அணியாக இணைந்து அவனியைக் காப்போம் என்ற உறுதியின் வெளிப்பாடு. எதையும் சந்திக்க தயார் என்ற துணிவின் வெளிப்பாடு.
“கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை” என்ற குறளின் வெளிப்பாடு.

தமிழக காவல் உயர்பயிற்சியகத்தை விட்டு உயர்களமான பொதுவாழ்வில் தடம் பதிக்கச் திடமாய் செல்லும் பயிற்சி உதவி ஆய்வாளர்கள் அனைவரின் பணி வாழ்வும் தனி வாழ்வும் சீரும் சிறப்புமாகத் திகழ என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’.

இவ்வாறு அமல்ராஜ் பேசினார்.