‘‘மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய உறுதி ஏற்போம்” அதிமுக தொண்டர்களுக்கு செ.ம. வேலுசாமி அழைப்பு
ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அண்ணா திமுக ஆட்சி அமைய உறுதி ஏற்போம் என முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி தனது அறிக்கை மூலம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: ‘புரட்சித்தலைவி அம்மா’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ஜெயராம் -சந்தியா தம்பதியருக்கு மகளாக பிறந்தார். படிப்பை முடித்துவிட்டு திரை துறையில் கால் பதித்து 127 படங்களில் நடித்து அதிலும் வெற்றி பெற்றார். 1982 ஆம் ஆண்டு அண்ணா திமுகவில் இணைந்த ஜெயலலிதா, 1984 ஆம் ஆண்டு எம்பி ஆனார். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது சத்துணவு திட்டம், பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பஸ் பாஸ், புத்தகம், முதியோர் உதவித்தொகை என ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போடிநாயக்கனூரில் போட்டியிட்டு வெற்றியடைந்து எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். தொடர்ந்து 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்று, ஜூலை 24ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து 2001, 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார். 1984 ஆம் ஆண்டுக்கு பின் ஆளும் கட்சி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, மாபெரும் வெற்றியாக 37 தொகுதிகளை கைப்பற்றியதுடன், நாடாளுமன்றத்தில் 3ஆவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் அண்ணா திமுக பெற்றது.
ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பான சிறப்பு திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் சுய உதவி குழு, தாலிக்கு தங்கம், திருமணத்திற்கு நலத்திட்ட உதவிகள், இலவச கல்வி, விலையில்லா மடிக்கணினி, பாடநூல், சைக்கிள், சீருடை, புத்தகப்பை மட்டுமின்றி பொங்கல் பரிசாக வேட்டி சேலை, மழை நீர் சேகரிப்பு திட்டம், இலவச மருத்துவ காப்பீடு திட்டம், விவசாயிகள் காப்பீடு திட்டம் உள்பட தமிழக முன்னேற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்களை செயல் படுத்தியுள்ளார். பல்வேறு சாதனைகளை படைத்த ஜெயலலிதா இந்த இயக்கத்தில் உள்ள 1.50 கோடி தொண்டர்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருகிறார்.
2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ஜெயலலிதா இதே தினத்தில் நம்மை விட்டு பிரிந்து சென்றார். அவர் மறைந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அம்மா அடிக்கடி சொல்வார் எனக்கு பின்னும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் வீறுநடை போடும் என்று. அதன்படியே அவர் மறைந்து 6 ஆண்டுகளை கடந்தும் இந்த இயக்கம் நல்வழியில் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்புடன் வழிநடத்தி வருகிறார்.
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்த அவர் குடிமராமத்து திட்டம், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, பொங்கல் தொகுப்பு ரூ.1000, அத்திக்கடவு அவினாசி திட்டம், என பல்வேறு திட்டங்களை நிறை வேற்றியுள்ளார். ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி அமைய உறுதி ஏற்போம். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.