மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற தலைமைக் காவலருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு
commissioner shankar jiwal appreciated Mr. Asia Body building winner of Head Constable Purushothaman
மாலத்தீவில் நடைபெற்ற 54வது மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம் பரிசு பெற்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்து சென்னை திரும்பிய தலைமைக் காவலர் புருஷோத்தமனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் புருஷோத்தமன். கடந்த 2000ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில், ஆணழகன் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு 10 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டங்களும், தேசிய அளவிலான காவல் பணித்திறனாய்வு ஆணழகன் போட்டியில் 1 முறை வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். மேலும் 2019ம் ஆண்டு நடைபெற்ற International ஆணழகன் போட்டியில் PRO card பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 6ம் இடம் பிடித்தார். இதன் மூலம் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட தமிழக காவல்துறையைச் சேர்ந்த முதல் காவலர் என்ற பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் புருஷோத்தமன் 21.05.2022 மற்றும் 22.05.2022 ஆகிய 2 நாட்கள் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டிக்கான தகுதி தேர்வில் வெற்றி பெற்றார். கடந்த 17.07.2022 முதல் 20.07.2022 வரை, மாலத்தீவில் நடைபெற்ற 54வது ஆசிய ஆணழகன் போட்டியில் (54th Asian Body Building Physique Sports Championship – 2022) கலந்து கொண்ட முதல் தமிழக காவல்துறை வீரர் என்ற பெருமையுடன் பங்கு பெற்று 3ம் இடம் பிடித்து இந்தியாவுக்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
21 நாடுகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்போட்டியில் 80 லோ மேற்பட்ட எடை பிரிவில் தலைமைக் காவலர் புருஷோத்தமன் 3ம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய போட்டியில் பதக்கம் வென்று இன்று (22.07.2022) சென்னை திரும்பிய தலைமைக் காவலர் புருஷோத்தமனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (22.07.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
மேலும், இப்போட்டியில் வென்றதன் மூலம் வரும் டிசம்பர்-2022 தாய்லாந்தில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டிக்கு புருஷோத்தமன் தேர்வாகி உள்ளார். அதில் வெற்றி பெற வேண்டி கமிஷனர் சங்கர்ஜிவால் வாழ்த்தினார். உடன் சென்னை நகர தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் உடனிருந்தார்.
*****