Take a fresh look at your lifestyle.

மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 3 நாள் போராட்டம்: எடப்பாடி அறிவிப்பு

74

தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வை கண்டித்து 9, 12, 13ம் தேதிகளில் அதிமுக மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், கோவை மாவட்ட அண்ணா திமுக சார்பில் மாபெரும் உண்ணா விரதப்போராட்டம் கோவை சிவானந்தா காலனியில் இன்று நடந்தது. உண்ணாவிரத போராட்டத்துக்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணா திமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரை யாற்றினார்.

அவர் பேசியதாவது: ‘‘அண்ணா திமுகவை தொடங்கி வைத்தவர் எம்ஜிஆர். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அதனை கட்டி காத்தார். இருபெரும் தலைவர்களுக்கும் நாட்டு மக்கள்தான் பிள்ளைகள். அவர்கள் வாழ்வு மலர, வாழ்நாள் முழுவதும் இருபெரும் தலைவர்கள் உழைத்து மறைந்தார்கள். பத்தாண்டுகால அண்ணா தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பாழாகிவிட்டது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். பத்தாண்டு அண்ணா திமுக ஆட்சி பொற்கால ஆட்சி. ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை நிறைவேற்றினார். அவரது மறைவுக்கு பின் எனது தலைமையில் 4 வருடம் 2 மாத காலம் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்கினோம். மக்கள் ஆட்சியை நடத்திய அண்ணா திமுகவை விமர்சனம் செய்வதற்கு யோக்கியதை வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு அண்ணா திமுகவை பற்றி பேசுவதற்கு யோக்கியதை கிடையாது. திட்டமிட்டு எங்கள் மீது அவதூறு பிரச்சாரம் செய்யும்போது, நாங்கள் பதில்சொல்ல வேண்டி உள்ளது. பத்தாண்டு காலத்தில் கோவை மாவட்டத்திற்கு அண்ணா திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அதனால் மக்கள் பெற்ற பலன்கள் ஏராளம். துணை சபாநாயகராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் 28 தடுப்பணை வேண்டும் என்றார். அத்தனையும் கட்டிக்கொடுத்தோம்.

விவசாயிகள், பொதுமக்களின் 70 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.1552 கோடியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியின்போது, நான் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த சமயம், சட்ட மன்றத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் அறிவிக்கப்பட்டது. கோவையில் பிரமாண்ட பாலங்களை கட்டிக்கொடுத்தோம். உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் அண்ணா திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 1800 கோடியில் லட்சுமி மில் பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் வரை மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டது.

வெள்ளலூரில் 62 ஏக்கரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 50 சதவீதம் பணிகள் முடிந்தது. ஜிஸ்கொயர் நிறுவனம் 200 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளது. அந்த இடத்தில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அமைக்க முயற்சி நடக்கிறது. அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் காழ் புணர்ச்சியுடன் திமுக நடந்து கொள்கிறது. கோவை மக்கள் அதனை எதிர்கொள்வார்கள். மேற்கு புறவழி சாலை பணி தொடங்கும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. குடிமராமத்து திட்டத்தால் நீர்வளம் பெருகி இருக்கிறது. குறிப்பாக கோவை மாநகராட்சியில் 500 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திமுக அத்தனையையும் ரத்து செய்தது. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அண்ணா திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ரத்து செய்யதது கண்டிக்கத்தக்கது. இத் திட்டங்களை செயல்படுத்தாமல் விட்டால் கோவை மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். 18 மாத திமுக ஆட்சி காலத்தில் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அன்னூர் பகுதியில் தொழிற்பூங்கா அமைக்க 3900 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1500 குடும்பங்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனை கைவிட வேண்டும். விளைநிலங்களை பிடுங்காமல் வறட்சியான பகுதியை தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் தொழில்பூங்கா அமைக்க வேண்டும்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது 520 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முக்கியமான அறிவிப்புகள் கல்விக்கடன் ரத்து, மகளிருக்கு ஆயிரம் உரிமைத்தொகை, 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும், அவர்களுக்கு சம்பள உயர்வு, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு என்றார்கள். எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. 7 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கொரோனா வைரசால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு வரும் நிலையில் அவர்கள் மீது பெரும் சுமையை திமுக அரசு சுமத்தி உள்ளது. வீட்டு வரி 100 சதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடை வரி 150 சதம் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்ந்துள்ளது. மின்கட்டண உயர்வு 53 சதம் வரை உயர்த்தி உள்ளார்கள். மக்கள் எப்படி தாங்குவார்கள். ஒரே சமயத்தில் உயர்த்தினால் மக்கள் எப்படி தாக்குப்பிடிப்பார்கள். மின்கட்டண உயர்வால் தொழிற்சாலைகள் பின்னடைவை சந்தித்து வருகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

சிலிண்டருக்கு மாதந்தோறும் 100 தருகிறோம் என்றார்கள். கொடுக்கப்படவில்லை. கட்டுமானத்துக்கு தேவைப்படும் சிமெண்ட், கம்பி மூலப்பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இணைக்கப்படும் என்றார்கள், செய்யவில்லை. அண்ணா திமுக ஆட்சியில் ஒரு டன் கம்பி 38 ஆயிரம் ரூபாய். திமுக ஆட்சியில் 79 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து இருக்கிறது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை 290 ரூபாயிலிருந்தது. திமுக ஆட்சியில் 409 ஆக உயர்ந்து இருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன செய்தார்கள். ஆவின் நிர்வாகம் பால் ஒரு லிட்டருக்கு ரூ.12 வரை விலையை உயர்த்தி இருக்கிறது. பால் விலை உயர்வு முழுவதும் நீக்கப்பட வேண்டும்.

பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உரிய இழப்பீட்டு தொகையை அரசு வழங்க வேண்டும். கவுண்டம்பாளையத்தில் செங்கல் தொழிற்சாலை கடுமையாக பாதித்துள்ளது. செங்கல் உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அண்ணா திமுக ஆட்சியில் செம்மண் விலை ரூ.3000. திமுக ஆட்சியில் 6000 ரூபாயாக உயர்ந்து உள்ளது.

வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள் அறிவித்தப்படி சம்பள உயர்வு அளிக்க வேண்டும். தமிழ்நாடு தோட்டக்கழகத்தை வனத்துறைக்கு வழங்குவதை அரசு கைவிட வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் விலை குறைந்து உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் கொப்பரை கொள்முதல் செய்தோம். அதனையும் தற்போது நிறுத்தி விட்டார்கள். கொப்பரை தேங்காய் விலை உயர்வதற்கு அண்ணா திமுக நடவடிக்கை எடுத்தது. விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் முதலமைச்சராக இருந்தபோது, கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டு வருவதற்கு சம்மதம் தெரிவிக்க வலியுறுத்தினோம். அவர்களும் பரிசீலிப்பதாக தெரிவித்தார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்கள். இதுவரை ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதைத் தான் தி.மு.க.வும் செய்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 3 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களில், 2017 18ல் நீட் தேர்வில் வெறும் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்புக்கு சேர்ந்தார்கள். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்கும் எண்ணம் ஈடேற 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு சட்டம் அண்ணா திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இந்தாண்டு 565 பேருக்கு எம்பிபிஎஸ், பல் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் தேர்வு பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என உத்தரவிடப்பட்டு அதனையும் செயல்படுத்திய அரசு அண்ணா திமுக அரசு.

பத்தாண்டுகாலம் தமிழகத்தை வீணடித்துவிட்டோம் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். இந்தியாவில் தார்சாலை அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமை பெற்றோம். உள்ளாட்சி துறையில் மட்டும் 140 விருதுகள் பெற்றோம். உறுப்பு மாற்று சிகிச்சையில் சுகாதாரத்துறைக்கும், 100 லட்சம் டன் உணவு உற்பத்தி செய்து வேளாண் துறைக்கும் விருது பெற்றோம். நீர் மேலாண்மையில் விருது பெற்றோம். மத்திய அரசிடமிருந்து அதிக விருதுகளை பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றோம்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் கல்வியில் புரட்சி செய்தோம். கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்ந்தது. ஏராளமான பள்ளிகள் திறக்கப்பட்டது. 76 கலை அறிவியல் கல்லூரிகள், 7 சட்ட கல்லூரிகள், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தோம். ஜெயலலிதா ஆட்சியில் 6 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசலில் அமைக்கப்பட்டது. இதுவெல்லாம் சாதனையில்லையா…? கடைக்கோடியில் வாழ்கின்ற மாணவன் கூட பட்டப்படிப்பு படிக்கிறார். திமுக ஆட்சியின்போது 100க்கு 34 பேர் படித்தார்கள். ஜெயலலிதா ஆட்சியின்போது 100க்கு 52 பேர் உயர்கல்வி படித்தார்கள். இது அண்ணா திமுக சாதனை.50 ஆண்டு கால காவிரி பிரச்சினையில் சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு கண்டது அண்ணா திமுக அரசு. சாதனைக்கு சொந்தக்காரர் அண்ணா திமுக ஆட்சி. அண்ணா திமுக ஆட்சியில் தமிழகம் நிமிர்ந்து வீறுநடை போட்டது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எதிர்க்கட்சியினருக்கு வயிறு எரிகிறது என்று ஸ்டாலின் சொல்கிறார். எங்களுடைய வயிறு எரியவில்லை. மக்களின் வயிறு எரிகிறது. ஸ்டாலின் நடைபயணம் போகும்போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் உதயநிதி நடித்த ‘கலகத்தலைவன்’ படம் எப்படி ஓடுது என்று கேட்கிறார். நாட்டுக்கு மிகவும் இது முக்கியம். சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது. ஸ்டாலின் நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சர். இவர் யோக்கியதை பற்றி பேசுகிறார்.

18 மாத கால ஆட்சியில் திமுக என்ன சாதனை செய்தது. என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள். அண்ணா திமுக ஆட்சியின் பத்தாண்டு கால சாதனை பற்றி பேச நான் தயார். ஸ்டாலின் தயாரா…? நாங்கள் கொண்டு வந்தது அனைத்தும் மக்களுக்கான திட்டம். மீண்டும் அண்ண திமுக ஆட்சி வர வேண்டும் என மக்கள் பேசுகிறார்கள். திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் நினைக்கிறார்கள். அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் பணிகளை முடக்கும் விதமாக பொய்வழக்கு போடுகிறார்கள். பொய் வழக்கு போட்டு அண்ணா தி.மு.க.வை முடக்க முடியாது. ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அண்ணா திமுகவை முடக்க முடியாது. வளர்ச்சியை தடுக்க முடியாது. அண்ணா திமுக மீது எத்தனை வழக்கு போட்டாலும் சட்ட ரீதியாக சந்தித்து தகர்த்தெறிவோம்.

திமுகவின் 18 மாத கால விடியா ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. ஆளுநரிடம் புகார் மனு கொடுத்து இருக்கிறோம். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது 10 முறை ஆளுநரிடம் புகார் கொடுத்தார். மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பார்கள். ஸ்டாலின் கொடுத்தது போலத்தான் நாங்களும் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம். பொங்கல் பரிசு கொடுக்க பொம்மை முதலமைச்சர் தடுமாறி கொண்டு இருக்கிறார். பொங்கல் பரிசு வழங்கியதில் 500 கோடி முறைகேடு நடந்துள்ளது. யார் நியாயம் செய்கிறார்கள் யார் அநியாயம் செய்கிறார்கள் என மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த தொண்டர்களின் வாகனங்களை காவல்துறை எடுத்துச்சென்றுள்ளனர். வாகனங்களை விடுவிக்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
ஆட்சி மாறினால் காட்சி மாறும். காவல்துறை கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தொந்தரவு கொடுக்க நினைத்தால் அதன் விளைவு விபரீதமாக இருக்கும். தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. அண்ணா தி.மு.க.வை சேர்ந்த 8 பேர் அமைச்சராக இருக்கிறார்கள். வேடந்தாங்கல் பறவைகள் போல் போனவர்கள். அவர்களது பேச்சை கேட்டு தவறு செய்ய வேண்டாம்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து வருகிற 9ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளிலும், 12ந் தேதி ஊராட்சி ஒன்றிய தலைநகரங்களிலும், 13ந் தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அகிம்சை முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். எங்களை சீண்டி பார்க்காதீர்கள். அண்ணாதிமுக தலைமையில் அமையும் மாபெரும் கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.