Take a fresh look at your lifestyle.

மின்னல்வேக மழைநீர் வெளியேற்றும் பணிகள்: அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன் 6 இடங்களில் ஆய்வு

73

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் இன்று ஒரே நாளில் ஆறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை முதலமைச்சர் உத்தரவின்படி, அமைச்சர்கள் நாள்தோறும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று கோடம்பாக்கம் மண்டலம் மற்றும் அடையாறு மண்டலங்களில் முக்கியமான ஆறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் கோடம்பாக்கம் மண்டலம், திவான் பாஷ்யம் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உந்து நிலையம் அமைக்கும் பணிகளையும், அங்கு தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சைதாப்பேட்டை – ஆலந்தூர் மேம்பாலம் பகுதியில் அடையாற்றில் வெள்ள நீர் வெளியேறுவதையும், அடையாறு மண்டலம், வார்டு -172, இணைப்பு சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளையும், மசூதி காலனி புதிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மழைநீர் வடிகாலில் மழைநீர் வெளியேறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மேயர் ஆர்.பிரியா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா, துணை மேயர் மு.மகேஷ் குமார், முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், கணக்குக்குழுத் தலைவர் க.தனசேகரன், கோடம்பாக்கம் மண்டல குழுத் தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.துரைராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.