சென்னை திருவான்மியூர், எழும்பூர் பகுதிகளில் மின்சார ரயில்களில் செயின் பறித்த கொள்ளையனை ரயில்வே போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை நகரில் மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் மர்ம நபர்கள் நகைகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. குறிப்பாக சென்னை திருவான்மியூர், எழும்பூர் ரயில் நிலையங்களில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தொடர் செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. அது தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா உத்தரவிட்டார். அதன்படி ரயில்வே டிஐஜி அபிஷேக் திக்சித் மேற்பார்வையில் எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கொண்ட மூன்று தனிப்படை அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி மாலை 4 மணியளவில் ரயில்வே போலீசார் மயிலாப்பூர், திருமயிலை ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் இருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த மயிலாப்பூர் பிஎன்கே கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவரை எழும்பூர் ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் மின்சார ரயில்களில் தொடர் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது சோழிங்கநல்லூரில் வசித்த வரும் ஜெயராமன் திருவான்மியூர், எழும்பூர் ரயில்வே காவல் நிலையங்களில் உள்ள குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரிடம் இருந்து 8 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னைபுழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செயின் பறிப்பு வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கைது செய்து வழக்கு சொத்துக்களை கைப்பற்றிய தனிப்படையினரை ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா வெகுவாக பாராட்டி, பாரட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.