Take a fresh look at your lifestyle.

மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை

104

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இன்று அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை பட்டிதொட்டி எங்கும் மக்களிடம் எடுத்து சொல்வது குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. காலை 11.10 மணி முதல் 12.40 மணி வரை ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். சால்வைகளும், பூங்கொத்துகளும் வழங்கி எடப்பாடி பழனிசாமியை அன்புடன் வரவேற்றார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், கட்சி பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், பா.பென்ஜமின், பொள்ளாச்சி ஜெயராமன், நா.பாலகங்கா, டி.ஜி. வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, விருகை ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆதிராஜாராம், எம்.கே.அசோக், கே.பி.கந்தன், மாதவரம் மூர்த்தி, அலெக்சாண்டர், பி.வி.ரமணா, சிட்லபாக்கம் ராசேந்திரன் உட்பட மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மாவட்ட செயலாளர்களும், பிற மாநில கழகச் செயலாளர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், விடியா தி.மு.க. அரசின் பல்வேறு மக்கள் விரோத செயல்களை பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம் எடுத்துரைப்பது குறித்தும், எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார் என்று அண்ணா தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விரிவாக பேசினார். அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்தும், அந்த தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்தும் அவர் மாவட்ட செயலாளர்களுடன் விளக்கினார். அனேகமாக இந்த மாதத்திற்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் எடப்பாடி பழனிசாமி விளக்கினார். இந்த தேர்தலில் நாம் கடுமையாக உழைத்தோம். இருந்தாலும் இந்த தேர்தல் நமக்கு ஒரு பாடத்தை தந்துள்ளது. இனி நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. சட்டசபை தேர்தலும் வர இருக்கிறது. எனவே இந்த தேர்தல்களில் நாம் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், வியூகம் வகுத்து செயல்பட வேண்டும். ஒரு வாக்கை கூட நாம் சேதப்படுத்தி விடக்கூடாது என்று எடப்பாடி கூறினார்.

பூத் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டியை அமைக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக உஷாராக இருக்க வேண்டும். பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்பதற்காக ஒரே குடும்பத்தில் உள்ளவர்களை இதில் சேர்த்து விடக்கூடாது. கட்சியில் உள்ள பல்வேறு அணியை சேர்ந்தவர்களையும், கட்சிக்கு உண்மையாக கடுமையாக உழைப்பவர்களையும் இந்த பூத் கமிட்டியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே பேசினார். மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் குறித்து பல்வேறு வியூகங்களை வகுத்து கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி பேச்சு மற்றும் கருத்துக்களை கேட்ட மாவட்ட செயலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் புதிய உத்வேகத்துடனும் வந்தார்கள்.