தமிழகம் முழுவதும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதன் தலைவர்கள் எத்தனை பேர் உள்ளனர், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை அனுப்பும்படி டிஜிபி அலுவலகம் சார்பில் அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், கமிஷனர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்னும் பிஎப்ஐ அமைப்புக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தியது. அந்த தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பிஎப்ஐ அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்து மத்திய அரசு அரசாணையும் வெளியிட்டது. அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன. போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு குண்டு வீசிய நபர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கலவர சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்து அமைப்பு சார்பாக நடத்தப்படவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புக்கள் எத்தனை உள்ளன. கடந்த 22ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் மேற்கண்ட இந்து அமைப்புக்களுக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன என்பது குறித்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி டிஜிபி அலுவலகம் மாவட்ட எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘தமிழகத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வசிப்பவர்களின் வீடுகள் எண்ணிக்கை, அலுவலகங்கள், அமைப்புக்கள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் வியாபாரத் தலங்கள் எத்தனை உள்ளன என்பது குறித்து முழு விவரங்கள் அனுப்பபட வேண்டும். மேலும் இந்து முன்னணி தலைவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அதிகாரிகள் எத்தனை பேர் மற்றும் தற்காலிக பாதுகாப்பு அதிகாரிகள் எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் போன்ற விவரங்களை உடனடியாக டிஜிபி அலுவலகத்துக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும். மேலும் கடந்த 22.9.2022 முதல் மாவட்டங்களில் எத்தனை காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற விவரங்களையும் அனுப்ப வேண்டும்’’. இவ்வாறு டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.