Take a fresh look at your lifestyle.

மாண்டஸ் புயல்: மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பாதை சேதமடைந்தது

84

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்க பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது.

சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்கும் பணி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயிண்ட் பின்பு மணல் பரப்பில் 380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் பாதை அமைக்கப்பட்டு, கடந்த நவம்பர் 27 ந்தேதி பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து வருவதால் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதை கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பலகைகள் உடைந்து காணப்பட்டன. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடற்கரை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இதனால் கடற்கரையில் பொதுமக்கள் வருகையைத் தடுக்கவும், கண்காணிக்கவும் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.