Take a fresh look at your lifestyle.

மாண்டஸ் புயலால் சேதம்: காவலர் குடியிருப்புக்களில் விரைந்து சரி செய்ய கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு

44

மாண்டஸ் புயலால் சேதமடைந்த சென்னை, கீழ்ப்பாக்கம், ஓட்டேரி மற்றும் கொண்டித் தோப்பு காவலர் குடியிருப்புகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் சென்று பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்து காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மாண்டஸ் புயலால் சென்னை, கொண்டித்தோப்பு, வேப்பேரி தண்டையார்பேட்டை, கீழ்ப் பாக்கம், ஓட்டேரி, புதுப்பேட்டை குதிரை பராமரிப்பாளர் காவல் குடியிருப்பு, ராயபுரம் சிங்கார கார்டன், மற்றும் தம்புலேன் ஆகிய காவல் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி யிருந்தது. அதனை சரிசெய்யும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்க உத்தர விடப்பட்டு, இதற்கான பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ள ரூ. 2,57,67,300- திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டு தற்போது நடந்து வருகிறது.

நேற்று மாலை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் மற்றும் காவல் அதி காரிகள் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் கீழ்ப்பாக்கம் ஓட்டேரி மற்றும் கொண்டித்தோப்பு ஆகிய காவலர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று அங்குள்ள காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேற்கண்ட குடி யிருப்புகளில் மாற்றியமைக்கப்பட்ட மின் மீட்டர்கள் பராமரிப்பு, கழிவு நீர் கால்வாய் சரிசெய்தல், சாலை வசதி மேம்படுத்துதல், பழுதடைந்த கட்டிடங்களை சரி செய்தல், தெருவிளக்குகள் அமைத்தல், மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்துதல் போன்ற பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, காவலர் குடும்பத்தினர் தெரிவித்த குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய உறுதியளித்து, துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணைக்கமிஷனர் செந்தில்குமார், காவல் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைமை பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்தர், மேற்பார்வை பொறியாளர் சேகர், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.