சென்னை மாங்காட்டில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த டில்லியைச் சேர்ந்த நபர் உள்பட 3 பேரை ஆவடி காவல் ஆணையரக போலீசார் டில்லிக்கு சென்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மாங்காடு பகுதியில் டாக்டர் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் போதைக்காக விற்பனை செய்யப்படுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் போதை ஆசாமிகளை பிடிக்க மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசாரின் தீவிர கண்காணிப்பில் மாங்காடு பகுதியில் டைடால் மாத்திரைகளை விற்பனை செய்த தியாகராஜன், சரத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350 டைடால் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. கைதான இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.
டில்லியில் உள்ள ஒரு நபரிடமிருந்து ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். Med Buy என்ற வெப்சைட் மூலமாக டைடால் மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டு அவை தனியார் கூரியர் நிறுவனம் மூலம் சப்ளை செய்யப் பட்டுள்ளது தெரியவந்தது. அதனையடுத்து ஆன்லைன் ஆர்டரை உறுதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அதனை பயன் படுத்தியவர் உ.பி. மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த ஆர்ஷ் கோயல் என்பதும் அவர் டில்லியில் இருந்தபடி போதை மாத்திரைகளை சென்னைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் டில்லி சென்று ஆர்ஷ் கோயலை நேற்று முன்தினம் கைது செய்தனர். அங்கு செல்போன் கடையில் வேலை செய்த ஆர்ஷ் கோயல் மருந்து மாத்திரைகளை டெலிவரி செய்யும் வேலையை பார்ட் டைமாக செய்து வந்துள்ளார். Popular Web Hosting கம்பெனி மூலமாக MedBuy என்ற வெப்சைட்டை அவர் உருவாக்கி அதன் வழியாக சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை ஆர்ஷ் கோயல் விற்பனை செய்து வந்துள்ளார்.
அவரிடம் இருந்து Nitrazepam மாத்திரைகள் 3,175 Nitrosun மற்றும் Nitravet மாத்திரைகள் 225, Spasmo ProxyVon மாத்திரைகள் 400, Tydol மாத்திரைகள் 550, Pentazocine injection மற்றும் இருமல் சிறப்பு பாட்டில்கள் 145 மற்றும் ரொக்கம் ரூ. 9 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றினர். அவர் காசியாபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். டில்லி சென்று போதை ஆசாமியை கைது செய்த தனிப்படையினரை ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.