சென்னையை அடுத்த செங்கல்பட்டு, சிவபெருமாள் கோவில் அனுமந்தபுரம் மலைப் பகுதியில் 3 சக்திவாய்ந்த ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்காத நிலையில் கிடந்தன. அவற்றை மாடு மேய்க்கும் நபர்கள் கண்டு மறைமலைநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவை ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியின் போது ராணுவ வீரர்கள் பயன்படுத்தியவை என்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு உதவி கமிஷனர் சிங்காரவேலன் தலைமையில் மறைமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணி, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயல் இழத்தல் துறை அதிகாரிகள் நேரில் சென்றனர். ராக்கெட் லாஞ்சர்களை மீட்டு, குழி தோண்டி சுற்றி மணல் மூட்டை அடுக்கி பாதுகாப்பாக வைத்தனர். கோர்ட் உத்தரவின் பேரில் தடயவியல் துறை நிபுணர்கள் மூலமாக பாதுகாப்பாக ராக்கெட் லாஞ்சர்கள் செயலிழக்கச் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.