Take a fresh look at your lifestyle.

மருத்துவத் தமிழ் அறிவியல் மாநாடு: எளிமையான, புதுமையான செலவில்லா மருத்துவம்: நிபுணர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

108

மருத்துவம் என்பது எளிமையானதாக – புதுமையானதாக – அதே நேரத்தில் அதிக செலவு இல்லாததாகவும் அமைய வேண்டும். அது குறித்து இன்றைய மருத்துவ தமிழ் அறிவியல் மாநாடு அதிகம் சிந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்கள், நிபுணர் களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இன்று நடந்த காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவத் தமிழ் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

காது – மூக்கு – தொண்டை – தலை -கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய டாக்டர் மோகன் காமேஸ் வரனுக்கும் அவருக்குத் துணைநின்று இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அன்பர்கள் அனைவருக்கும் நான் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற உலக ஈஎன்டி பேரவைக் கூட்டத்தில், உலகெங்கிலும் இருந்து 10 தலைசிறந்த மருத்துவர்களுக்கு உயரிய தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பத்துப் பேரிலும் ஆசிய கண்டத்தில் இருந்து அந்தப் பெருமைமிகு பன்னாட்டு விருதுக்குத் தேர்வான ஒரே மருத்துவர் யாரென்று கேட்டால், நமது மோகன் காமேஸ்வரன் தான்.

உரையைத் தொடங்குவதற்கு முன்னால், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் என்ற முறையில், தமிழ்நாடு மக்கள் சார்பிலே, தமிழன் என்கிற அந்த உணர்வோடு அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெற இருக்கிறது என்பது, முதல் மகிழ்ச்சியாக அமைந்தி ருக்கிறது. தமிழ் என்று சொல்லுகிறபோது, எங்களையெல்லாம் ஆளாக்கிய நம்முடைய தலைவர் கலைஞர் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார், தமிழைப் பற்றி பெருமையோடு சொல்லுகிறபோது அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

உளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே!

ஓடை நறுமலரே! ஒளியுமிழ் புதுநிலவே!

அன்பே! அமுதே! அழகே! உயிரே!

இன்பமே! இனிய தென்றலே!

பனியே! கனியே! பழரசச் சுவையே!

மரகத மணியே! மாணிக்கச் சுடரே!

-என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழைத் தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் கிடையாது.

அப்படிப்பட்ட அந்த அழகுத் தமிழ்மொழியில் இந்த மாநாடு நடைபெறுவது உள்ளபடியே பாராட்டுக்குரியது. பொதுவாக இதுபோன்ற மாநாடுகள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் நடக்கும். அதுவும் கோட்-சூட் அணிந்துகொண்டு தான் வருவார்கள். ஆனால், இந்த மாநாட்டில் அதிலும் குறிப்பாக இந்த மாநாட்டை நடத்தக்கூடிய மோகன் காமேஸ்வரன் எப்படி இருக்கிறார் என்று பார்க்கிறீர்கள், வேட்டி, சட்டையோடு வந்திருக்கிறார். மோகன் காமேஸ்வரனின் தந்தை டாக்டர் காமேஸ்வரனை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவரி டத்திலும் நான் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்காகப் பலமுறை சென்றிருக்கிறேன். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டு 1976-ம் ஆண்டு நம்முடைய ஆட்சி தமிழ்நாட்டில் கலைக்கப்பட்டு, மிசா சட்டம் வந்து அந்த மிசா சட்டத்தின்கீழ் கைதாகி சிறையில் இருக்கக்கூடிய நிலை எனக்கு ஏற்பட்டது, ஒரு வருடம் இருந்தேன். நான் அந்தப் பிரச்சனைக்கு அதிகம் போக விரும்பவில்லை.

அப்படி சிறையில் இருந்தபோது எனக்கு E.N.T. பிரச்சனை வந்தது, சைனஸ் பிரச்சனை வந்தது. அப்போது சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு என்னைக் காவலர் பாதுகாப்போடு அழைத்துக் கொண்டு செல்வார்கள். அவர் இருக்கக்கூடிய கட்டடத்திற்கு காவலர் பாதுகாப்போடு கொண்டு செல்வார்கள். நான் சிறையிலிருந்து பொது மருத்துவமனைக்கு வரக்கூடிய செய்தி என்னுடைய தாய்க்கு தெரிந்து என்னுடைய தாய், தங்கை, தம்பி என்னுடைய வீட்டிலிருந்து பலபேர் புறப்பட்டு என்னைப் பார்க்க வருவார்கள். மருத்துவமனைக்கு வரும்போது பார்க்கலாம் என்ற ஆர்வத்தோடு வரு வார்கள். வரும்போது கையில் சிறிது சூப்-ஐயும் எனக்குக் கொடுப்பதற்காக என்னுடைய தாயார் எடுத்துக் கொண்டு வருவார்கள். சில நேரங்களில் சில காவலர்கள் தாராளமாக விட்டுவிடுவார்கள், ஆனால், சில காவலர்கள் விடமாட்டார்கள், மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள், அது அவர்களது கடமை. அப்படிப்பட்ட நேரங்களில், டாக்டர் காமேஸ் வரனைப் பார்ப்பதற்கு நான் அந்த அறைக்குச் செல்கிறபோது காவலர்களும் உள்ளே வருவார்கள். நோயாளியை நான் தனியாகப் பார்க்க வேண்டும், நீங்கள் வெளியில் இருங்கள் என்று காவலர்களை வெளியில் நிற்க வைத்துவிடுவார். அதற்கப்புறம் இவருடைய தனி அறை பின்புறம் இருக்கும், அங்கு என்னுடைய அம்மா இருப்பார்கள், அவர்களை அழைத்து சூப்-ஐக் கொடுங்கள் என்பார், அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.

அப்படிப்பட்டவருடைய புதல்வராக நம்முடைய மோகன் காமேஸ்வரன், தந்தை வழிநின்று தந்தை போலவே, தந்தையைவிட இன்னும் சிறப்பாக அந்தப் பணியில் அவர் ஈடு பட்டிருக்கிறார், மருத்துவத் துறையில் இன்றைக்குப் புகழ் பெற்று விளங்கிக் கொண்டி ருக்கிறார் என்பதைப் பார்க்கிறபோது, உள்ளடியே நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது.

தலைவர் கலைஞர் உடல் நலிவுற்றிருந்த நேரத்தில், பல மருத்துவர்கள் தலைவருக்குப் பக்கத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டு இருந்தார்கள். அதில் முக்கியமான ஒருவர் யார் என்று கேட்டீர்களானால், நம்முடைய டாக்டர் மோகன் காமேஸ்வரனும் ஒருவராக இருந்தார். எதுவாக இருந்தாலும், நாங்கள் அவரிடத்தில்தான் கேட்போம். அவர்தான் தலைவருடைய உடல்நிலையைப் பற்றி அவ்வப்போது எங்களுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த நட்பு குறித்து தலைவர் கலைஞர் மறைந்தபோது அக்கார்டு ஹோட்டலில் புகழ் அஞ்சலிக் கூட்டம் நடத்தினோம். தலைவருக்கு யார் யாரெல்லாம் மருத்துவம் பார்த் தார்களோ, அத்தனை மருத்துவர்களையும் அழைத்து புகழஞ்சலிக் கூட்டம் நடத்தினோம். அந்தக் கூட்டத்தில் நம்முடைய மோகன் காமேஸ்வரன் பேசிய பேச்சு இன்றைக்கும் யாராலும் மறக்க முடியாது. இப்போதும் பேஸ்புக்கில், ட்விட்டரில், வாட்ஸ்ஆப்-ல் பார்த்தீர்களானால், அந்தப் பேச்சைக் கேட்க முடியும். எல்லோரையும் உருக வைக்கக்கூடிய வகையில் அவருடைய பேச்சு இருந்தது. அந்தளவுக்கு அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியது; மிக உருக்கமான உரையாக அது அமைந்தது.

அவர் பேசும்போது சொன்னார், தனக்கும் தலைவர் கலைஞருக்கும் இருந்தது, ‘டாக்டர் – நோயாளி உறவு’ மட்டுமல்ல, ‘தந்தை – மகன் உறவு’ போல இருந்தது என்று அவர் பெருமையாக சொன்னார். இன்றைக்கு அவர் அந்த உறவைச் சொன்ன காரணத்தால், அவர் எனக்கு சகோதரர், அவரைப் பார்த்தால் வயது கூட இருப்பது போன்று தெரியும். ஆனால், அவரைவிட நான் வயதில் மூத்தவன். அவர் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார். அந்தளவுக்கு உணர்வுப்பூர்வமாக தலைவர் கலைஞரோடு பழகியதால்தான், சமத்துவபுரத்தில் மாற்றுத்திறனாளிகளும் இடம் பெறுவதற்கான ஆலோசனையை நமது மருத்துவர் மோகன் காமேஸ்வரனால் சொல்ல முடிந்தது.

அதேபோல், காதுகேளாத – வாய் பேசாத குழந்தைகளுக்குத் தேவையான குழந்தைகளுக்கான ‘காக்லீயர் அறுவைச் சிகிச்சையை’ இலவசமாக அளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தவும் நம்முடைய மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தான் காரணமாக அமைந்தார். அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞரிடத்தில் அதைப் பற்றி விளக்கமாக எடுத்துச்சொல்லி நடைமுறைப்படுத்த வைத்தவர் நம்முடைய டாக்டர் மோகன். இதனால் பயன்பெற்ற ஐம்பது குழந்தைகளை, முதலமைச்சராக இருந்த தலைவரிடத்தில் கோபாலபுரத்திற்கு அழைத்து வந்து, முதலமைச்சரிடத்தில் அதை அறிமுகப்படுத்தினார். அன்றைக்குத் தலைவர் கலைஞர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு விவாத நிகழ்ச்சி. அந்த விவாத நிகழ்ச்சியில், வடமாநிலப் பெண் ஒருவர் பேசிய பேச்சு, வைரலானது. தமிழ்நாட்டிற்கு வந்து வாழும் வடமாநிலப் பெண் அவர். தமிழ்நாடு எந்த வகையில் எல்லாம் எங்களுக்குப் பயனளித்திருக்கிறது என்பதைப் பற்றி அந்தப் பெண் சொல்லும்போது, இந்த காக்லீயர் அறுவைச் சிகிச்சையைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறார்.

”எனது மகனுக்கு ஒரு வயது வரை காது கேளாமல் வாய் பேச முடியாமல் இருந்தது. டாக்டரிடம் சென்று காட்டினேன். பரிசோதனை செய்த டாக்டர், உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கிறதா என்று கேட்டார். தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு இருந்தால், உங்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அறுவைச் சிகிச்சை செய்து தரப்படும் என்று அந்த டாக்டர் சொன்னார். ரேஷன் கார்டு வாங்கினேன். அதைக் காட்டி எனது மகனுக்கு இலவசமாகவே ஆபரேஷன் செய்து முடித்தேன். இன்று என் மகன் பேசுகிறான்” என்று அந்தப் பெண் சொன்ன வீடியோ வைரல் ஆனது.

4,681 குழந்தைகளுக்கு காக்லீயர் அறுவைச் சிகிச்சை

இதற்குக் காரணம் யார் என்று கேட்டீர்களென்றால், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர். அதனைத் தூண்டியவர் யார் என்று கேட்டீர்களென்றால், இங்கு இருக்கக்கூடிய டாக்டர் மோகன் காமேஸ்வரன். இதனை ஜெனீவா மாநாட்டில் சொல்லி, 2000 குழந்தைகளுக்குக் காது கேட்கிறது, பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் கலைஞர் என்று சொல்லி அவர் படத்தை போட்டுக் காண்பித்தவர்தான் நம்முடைய மோகன் காமேஸ்வரன். இன்று இந்தத் திட்டம் மேலும் வளர்ந்து, 4 ஆயிரத்து 681 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இலவசமாக செய்யப்பட்டிருக்கிறது. கலைஞர் பெறாத எத்தனையோ பிள்ளைகளில் மோகனும் ஒருவர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். எனவே என்னுடைய சகோதரர் டாக்டர் மோகன் நடத்தும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக மருத்துவ மாநாடுகளில் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களின் பொன்மொழிகளை அச்சிட்டு இருப்பார்கள். ஆனால், நம்முடைய மோகன் காமேஸ்வரன், உலகப் பொதுமறையாக இருக்கக் கூடிய திருக்குறளை வெளியிட்டு இருக்கிறார்.

* செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்

* நுணங்கிய கேள்வியர்

* எனைத்தானும் நல்லவை கேட்க

* கேட்பினும் கேளாத் தகையவே

* செவிக்குணவில்லாத போது

-போன்ற அருமையான திருக்குறள்களை அழைப்பிதழில் அவர் பயன்படுத்தி இருக்கிறார், இந்த அழைப்பிதழில் அவர் வெளியிட்டிருக்கிறார். திருவள்ளுவரையே காது – மூக்கு – தொண்டை மருத்துவரைப் போல ஆக்கிவிட்டார் நம்முடைய மோகன். அடிப்படையான குறைபாடாக இருக்கும் குறைபாடுதான் செவித்திறன் குறைந்து இருப்பதும், வாய் பேசாமல் இருப்பதும். பெரும்பாலான நோய்கள் பிறப்புக்குப் பிறகு வருபவைதான். ஆனால், செவித்திறன் குறைந்திருத்தல் போன்றவை சிலருக்கு பிறக்கும்போதே ஏற்படுகிறது. குழந்தைகளுக்குக் காது கேளாமை அதிகளவில் அதிகரித்து வருகிறது. இது ஜெனிட்டிக் – அதாவது மரபு வழிப் பிரச்சினையாகவும் சொல்லப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு அடைதலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதிலும் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு நம்முடைய கவிப்பேரரசு சொன்னதைப்போல, தொண்டை மிக மிக மிக முக்கியம். தொண்டை போய்விட்டால் தொண்டே போய்விடும். லேசாகத் தொண்டை கரகர என்று வந்துவிட்டால், உடனே டாக்டர் மோகனுக்குத்தான் நான் போன் செய்வேன், உடனே கிளினிக்குக்கு நான் சென்றுவிடுவேன்.

காது மூக்கு தொண்டை கழுத்து இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பிரச்சினைகள். அதைப்பற்றியெல்லாம் விளக்கமாக நம்முடைய கவிப் பேரரசு சொல்லியிருக்கிறார். இது அனைவருக்குமான பிரச்சினை என்கிற காரணத்தினால், தாய்மொழியில் இந்த மாநாடு நடத்தப்படுவது மிகமிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

நிர்வாகத்தில் தமிழ்
ஆட்சியில் தமிழ்
பள்ளிகளில் தமிழ்
கல்லூரிகளில் தமிழ்
நீதிமன்றத்தில் தமிழ்
கோயில்களில் தமிழ்
இசையில் தமிழ்

என ‘எங்கும் தமிழ் – எதிலும் தமிழ்’. பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக, முக்கியத்துவம் தருவதை வலியுறுத்தும் அரசாக நமது அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அரசின் சார்பில் நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். தொழில் படிப்புகள் அனைத்தும் தாய்மொழியில் படிக்க வழிவகை செய்ய அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியையும் தொடங்கி இருக்கிறோம். கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள். சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும். உலகில் திறமையான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சென்னைக்கே மெடிக்கல் சிட்டி, மெடிக்கல் கேப்பிட்டல் என்றுதான் பெயர். எத்தகைய நோயையும் குணப்படுத்தக்கூடிய வசதி எல்லாமே இங்கு உண்டு. அந்த வகையில் மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது. இதில் மோகன் காமேஸ்வரனைப் போன்றவர்களை – தங்களைப் போன்ற திறமைசாலி மருத்துவ நிபுணர்களை உருவாக்க வேண்டும். மருத்துவம் என்பது, ‘படிப்பு – அனுபவம் – ஆராய்ச்சி – சேவை – தொலைநோக்கு’ ஆகிய அனைத்தும் கலந்த படிப்பு! அத்தகைய அனைத்து ஆற்றலும் பொருந்தியவர் நம்முடைய டாக்டர் மோகன் காமேஸ்வரன். அவர் ஏராளமான திறமைசாலி மருத்துவர்களைத் தமிழ்நாட்டுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டு, இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் மோகன் காமேஸ்வரன், கவிப்பேரரசு வைரமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், த. வேலு, தலைவர் சி. திருமலைவேலு, செயலாளர் எம்.என். சங்கர்,பொருளாளர் ச. ரகுநந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.