விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கடலோர பகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி கிராமப்புற பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்தன. புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடலில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகளின் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது. இதனால் 19 கிராம மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மீனவர்கள் தங்களது மீன்பிடி சாதனங்களான பைபர் படகு வலை போன்றவைகளை பாதுகாப்பான இடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் சீற்றத்தால் 10 வீடுகள் இடிந்து விழுந்தன.
தென்னை மரங்கள் முறிந்து விழுந்து கடலுக்குள் சென்றன. கரையில் இருந்த 3 படகுகள் கடலில் அடித்து செல்லப்பட்டன. மரக்காணம் மற்றும் வானூர் பகுதிகள் கடற்கரை ஒட்டிய பகுதி என்பதால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் பிள்ளைச்சாவடி பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனால் மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரையும் அருகாமையில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று இரவு 10 மணி முதல் கடற்சீற்றம் மற்றும் பலத்த காற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படும் என்பதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டினுள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 40 வீரர்களை கொண்டு பேரிடர் மீட்புக்குழுவினர் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். மேலும், தேவையான படகு வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புயல் நிவாரண முகாம்களிலும் 500 முதல் 700 நபர்கள் வரை தங்கவைக்கின்ற அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் த.மோகன் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.