Take a fresh look at your lifestyle.

மனிதநேயம், சமூகநீதி தான் திராவிட மாடல் ஆட்சி கனடா காணொலியில் ஸ்டாலின் பேச்சு

81

அமெரிக்கா மற்றும் கனடா மனிதநேய அமைப்புகள் ஆகியவை இணைந்து நடத்தும், மூன்றாவது பன்னாட்டு மனிதநேயச் சமூக நீதி மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது: ‘‘ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று அறிவித்த ஒரே நாடு, கனடா! அத்தகைய நாட்டில், இந்த மாநாடு நடப்பது மிகமிக பொருத்தமானது! தமிழர்கள் அதிகளவில் வாழும் அயல்நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது. தைப்பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்வித்தவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. மனிதநேயத்தின் அடிப்படையே சமூகநீதிதான்! சமூகநீதிக் கருத்தியலே மனிதநேயத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய சமூகநீதியைப் பேசியவர்கள் தான் திருவள்ளுவரும் பெரியாரும். இதனை இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசும் சிந்தனையாளர்களாகிய நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். திருவள்ளுவரின் குறளையும் தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் உலகளாவிய அளவில் கொண்டு செல்வதன் மூலமாக மனிதநேய உலகத்தை, சமூகநீதி உலகத்தை, சமநீதி உலகத்தை, சமத்துவ உலகத்தை நாம் உருவாக்க முடியும். பெரியார் இன்று உலகமயமாகி வருகிறார் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன். ஆங்கில நூல்களில்கூட இல்லாத கருத்துகளை பெரியார் பேசி இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் அண்ணா. வருங்காலத்தில் எங்கும் ஆகாய விமானம் இருக்கும். கம்பி இல்லாத் தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.

ரேடியோ – ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும். உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் இருக்கும். ஆளுக்கு ஆள் எங்கே இருந்தாலும் உருவத்தைக் காட்டிப் பேசிக் கொள்ளலாம். ஒரு இடத்தில் இருந்தபடியே பல இடங்களில் உள்ள மக்களுக்கு கல்வி கற்றுத்தரலாம். சிறு குப்பிகளில் அடக்கக் கூடிய உணவுகள் வந்துவிடும். மனிதனின் வாழ்நாள் அதிகமாகும். குழந்தைகள் பிறப்புக்கு ஆண் – பெண் இனச்சேர்க்கை அவசியம் இருக்காது. மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு விடும். மோட்டார் கார்களின் எடை குறையும். பெட்ரோலுக்கு பதில் மின்சாரத்தை பயன்படுத்தலாம். அனைத்து அறிவியல் சாதனங்களும் மக்களுக்கு எளிதில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும்.

இப்படி எத்தனையோ அரிய கருத்துகளை 1943 ம் ஆண்டு சொன்னார் தந்தை பெரியார். நாம் இன்று பயன்படுத்தும் செல்போன், வீடியோ கால், வீடியோ கான்பரன்ஸ், எப்.எம். வசதிகள், பேக்ஸ், உணவு கேப்சூல்கள், பேட்டரி கார்கள் ஆகியவை பற்றி அன்றே சொல்லி விட்டார் பெரியார். டெஸ்ட் டியூப் பேபி பற்றியும் அன்றே சொல்லி விட்டார். குடும்பக் கட்டுப்பாடு என்பது அனைவரும் பின்பற்றும் நடைமுறை ஆகிவிட்டது.

தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்களான அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில்தான் நான் எனது தலைமையிலான ஆட்சியை நடத்தி வருகிறேன். இதற்கு திராவிட மாடல் என்று பெயர்சூட்டி இருக்கிறேன். எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனிதநேயமும் சமூகநீதியும்தான். அனைத்து இடங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறோம். வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீடு அனைவர்க்கும் சமவிகிதத்தில் தரப்பட்டு வருகிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள், சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அயோத்தி தாச பண்டிதருக்கு நினைவு மண்டபம் கட்ட இருக்கிறோம். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இலவச போக்குவரத்து பயண வசதி தரப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை அடைய தாய்மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி செல்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் செல்கிறது. உயர்கல்வி பெறும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. அரசுப்பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இளைஞர்களையும் மாணவ மாணவியரையும் தகுதியுள்ளவர்களாக ஆக்க நான் முதல்வன் திட்டம் அமலில் உள்ளது. அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்க்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்படி எண்ணற்ற திராவிட மாடல் திட்டங்களை தீட்டி தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம். கடந்த ஐம்பதாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமைகள், இருமொழிக் கொள்கை, தமிழ்மொழி மேம்பாடு, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மைக்குத் தரப்பட்ட முக்கியத்துவம், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கம், மாநில உரிமைகளுக்காக போராடுதல் -ஆகியவற்றின் மூலமாக தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதனை மேலும் உச்சத்துக்கு கொண்டுவரவே திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி சமூக மாற்றம் கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறேன். இத்தகைய திராவிடவியல் கொள்கையானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும் என்றும் சொல்லி வருகிறேன்.

இந்தியாவின் பிற மாநிலங்களை ஆளும் அரசுகள், தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அறிவதில் ஆர்வமாக இருக்கின்றன. தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதிலும் துடிப்புடன் இருக்கின்றன. இத்தகைய சூழலில் திராவிட மாடல் தத்துவமானது உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக கனடாவில் இம்மாநாடு நடத்தப்படுவதாகவே நான் நினைக்கிறேன். ”ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் திராவிடர்கள்தான்!” என்று சொன்னார் பெரியார். ஒரு மனிதன் சக மனிதனை, மனிதனாக நடத்துவதே மனிதநேயம்! அனைத்து மனிதர்க்கும் நீதி வழங்குவதே சமூகநீதி! தந்தை பெரியார் வலியுறுத்திய சமூக நீதி, மானுடப்பற்று, சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம் -ஆகிய ஐந்தும் உலகளாவிய கருத்தியல்கள். இவை, நாடு, மொழி, இனம், எல்லைகள் கடந்தவை! பெரியார் உலகமயமாக வேண்டும் என்ற ஆசிரியர் வீரமணியின் நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, கனடா மனிதநேய அமைப்பின் தலைவர் மார்ட்டின் ப்ரீத், பெரியார் பன்னாட்டு அமைப்பை வழிநடத்தும் மருத்துவர் சோம இளங்கோவன், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி, முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.