Take a fresh look at your lifestyle.

மத்திய குற்றப்பிரிவு மோசடி குற்றவாளிகள் உள்பட 10 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சங்கர்ஜிவால் நடவடிக்கை

ccb accused include 10 persons detained in goondas

103

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள்.

நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2022 முதல் 01.07.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 119 குற்றவாளிகள். திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 41 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருடகள் விற்பனை செய்த 12 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 180 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புரசைவாக்கம் சாலை மாநகரைச் சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பல நபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதே போல சென்னை பல்லாவரம் பாலா (எ) பாலமுருகன் (எ) மதுரை பாலா என்பவர் மீது 2 கொலை வழக்கு உள்ள நிலையில், வழிப்பறி செய்த குற்றத்திற்காக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மீது சிந்தாதிரிப்பேட்டை, சென்னை என்பவர் மீது 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 19 குற்ற வழக்குகளும், இவரது சகோதரர் சஞ்சய் (24) என்பவர் மீது 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 7 வழக்குகளும் உள்ளன. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கலை (எ) கலைராஜ் என்பவர் மீது 1 கொலை முயற்சி உட்பட 3 குற்ற வழக்குகளும் உள்ளன. இவர்கள் மூவரும் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.

மேலும் ஜோதி (எ) ஜோதி கணேஷ், தினேஷ் (எ) புளிமூட்டை தினேஷ் மீது 3 கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகள் உள்ள நிலையில் மேற்படி 5 நபர்களும் சேர்ந்து கடந்த 24.05.2022 அன்று சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாலச்சந்தர் என்பரை கொலை செய்த குற்றத்திற்காக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, ஜோதிகுமார் என்பவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளரும், பாலா (எ) பாலமுருகன் (எ) மதுரை பாலா என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளரும், பிரதீப், சஞ்சய், கலை (எ) கலைராஜ், ஜோதி (எ) ஜோதி கணேஷ், தினேஷ் (எ) புளி மூட்டை தினேஷ் ஆகிய 5 நபர்களை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரும் பரிந்துரை செய்ததின்பேரில் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் 7 நபர்களையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 28.06.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 7 நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் பல்லாவரத்தைச் சேர்ந்த டேவிட் (எ) கெவின்ராஜ் (எ) ஜான் சாலமோன் (30) என்பவர் மீது போலியாக கன்டெய்னர் நிறுவனங்கள் நடத்தி பல கோடி மோசடி செய்த குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவரது குற்றச்செயலை கட்டுப்படுத்த இவரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்ததின்பேரில் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் டேவின் (எ) கெவின்ராஜ் (எ) ஜான் சாலமோனை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 29.06.2022 அன்று உத்தரவிட்டதின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருவாரூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (55) என்பவர் சட்ட விரோதமாக போலியாக பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்து வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பியது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு, போலி கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.