மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு நட்சத்திர காவல் விருது கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்
Commissioner shankar jiwal Gave Police Star of the Month (June) award to SI logeshwaran
கடந்த ஜுன் மாதத்தில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையில் பணி செய்தமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் என்பவருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கி வருகிறார். அதற்காக தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜுன் மாதம் சிறப்பாகவும், மெச்சத்தக்க வகையிலும் பணியாற்றியமைக்காக மத்திய குற்றப்பிரிவு, ஆவணங்கள் மோசடி புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் என்பவரை ‘ஜுன் மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று நேரில் அழைத்து ஜுன் மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்குரிய ரூ. 5 ஆயிரம் பணம் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். லோகேஸ்வரன் போலியான கன்டெய்னர் நிறுவனங்கள் பெயரில் பலகோடி மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொன்ராஜ் உள்பட 7 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 58 லட்சம்-, 188 சவரன் தங்க நகைகள், 4 லேப் டாப்கள், 3 செல்போன்கள், 1 டேப்லட் ஆகியவைகளை பறிமுதல் செய்ய பெரிதும் உதவியாக இருந்து மெச்சத்தக்க வகையில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களில் வருகிற 28.07.2022 மற்றும் 29.07.2022 ஆகிய தேதிகளில் பிறந்தநாள் கொண்டாடும் 21 காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது கூடுதல் காவல் ஆணையாளர் டாக்டர் லோகநாதன் உடனிருந்தார்.