Take a fresh look at your lifestyle.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

104

2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பங்கேற்கிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரை விமான நிலையத்துக்கு இன்று (19.02.2023) காலை 11.40 மணிக்கு வந்தார். ஜனாதிபதியை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து 11.50க்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், தெற்குவாசல், கீழவாசல் சந்திப்பு, விளக்குத் தூண், வெங்கல க்கடை தெரு வழியாக கிழக்கு சித்திரை வீதிக்கு மதியம் 12.15 மணிக்கு ஜனாதிபதி வந்த டைந்தார். அங்கு அம்மன் சன்னதி பகுதியில் ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. அதன் பின்பு மீனாட்சி அம்மனையும், சுந்தரே ஸ்வரரையும் ஜனாதிபதி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள பல்வேறு பிர காரங்களிலும் ஜனாதிபதி பார்வையிட்டார். அவருக்கு கோவில் சார்பாக குங்குமம், மீனாட்சி அம்மன் சிலை பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதி காரில் புறப்பட்டு அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குச் சென்றார். அங்கு மதிய உணவுக்குப் பின்பு கோரிப்பாளையம், கீழவாசல் வழியாக மதுரை விமான நிலையம் சென்றடைந்து 2.10 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டார். கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பங்கேற்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் தலைமையில் பாது காப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமான நிலையம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, ஜனாதிபதி காரில் செல்லும் வழித்தடப் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு வெளியே தற்காலிகமாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மதுரையில் ஜனாதிபதி வருகையையெட்டி டிரோன் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.