Take a fresh look at your lifestyle.

போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலுக்கு ‘நல் ஆளுமை விருது’: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

police commissioner shankar jiwal rewarded by tn cm stalin

55

சென்னை, ஆக. 17–

சென்னை நகரில் காவல் கரங்கள் திட்டம் மூலம் சிறப்பான காவல் பணியாற்றி யமைக்காக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘நல் ஆளுமை’ விருது வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல்துறையில் “காவல் கரங்கள்” என்ற உதவி மையம், கடந்த 21.04.2021 அன்று கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார். இந்த உதவி மையம் “மனிதம் போற்றுவோம்” “மனித நேயம் காப்போம்” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 9444717100 என்ற எண்ணில் (24X7) என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

  • ஆதரவற்றவர்களுக்கு இறுதிச் சடங்கு

காவல் கரங்கள் உதவி மையம் தன்னார்வலர்கள், மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து கைவிடப்பட்ட நபர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன் அவர்களை பாதுகாப்பான காப்பகங்களில் தங்க வைத்து அவர்களை பராமரித்தும் வருகிறது. மேலும் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்றோர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படுகின்றது.

  • தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து

காவல் கரங்கள் உதவி மையத்துடன் 40 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 120 தன்னார்வலர்கள், 55 மாநகராட்சி இல்லம், 148 தனியார் இல்லம், சமூக நலத்துறை, 108 ஆம்புலன்ஸ் ஆகியவை இணைந்து ஆதரவற்ற நபர்களை மீட்டு அவர்களுக்கு உதவி செய்து வருகிறது. காவல் கரங்கள் உதவி மையத்தின் மீட்பு பணிக்காக EECO வாகனம் TN-01G 8784 Ambulance பயன்படுத்தப்படுகிறது. இந்த மீட்பு வாகனத்தின் மூலம் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் ஆதரவில்லாமல் சுற்றி திரியும் நபர்களை மீட்டு மீட்கப்பட்டவர்களின் தேவைக்கேற்ப பாதுகாப்பான முதியோர் இல்லம், மனநல மருத்துவமனை கீழ்ப்பாக்கம், பெண்கள் இல்லம், ஆண்கள் இல்லம், குழந்தைகள் இல்லம் அனுப்பி வைத்து அவர்களை கண்காணிக்கப்படுகிறது.

மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி தேவையெனில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனை, அல்லது அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தும் அவர்களை கண்காணிக்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, ஆதரவில்லாமல் சுற்றி திரியும் நபர்களையும் மீட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசகர் மூலம் முறையான ஆலோசனை வழங்குவதுடன் காவல் கரங்கள் குழுவால் அவர்களை தங்கள் குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்கப்படுகிறது.

  • அசாம் நபர் மீட்பு

கடந்த 12.05.2021 அன்று சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு கால்களிலும் மிகுந்த காயத்தோடு நடக்க முடியாத நிலையில் இருந்தார். அவரை காவல் கரங்கள் மூலம் மீட்டு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து காப்பகத்தில் ஒப்படைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அவரிடம் விசாரித்தபோது அவரது குடும்பம் அசாம் மாநிலத்தில் உள்ள பக்சா மாவட்டத்தில் பங்காலி பாட்கா (Bangali Parka ) என்ற ஊரில் இருப்பது தெரியவந்தது. அவர் அளித்த முகவரியில் விசாரித்து அவருடைய சகோதரர் இஸ்மாயில் அலி என்பவரிடம் தெரிவித்து கடந்த 17.06.2021 அன்று மீட்கப்பட்ட ஜாபர் அலியை அவரது குடும்பத்துடன் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார்.

  • குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஜபல்பூர் வாலிபர்

கடந்த 25.06.2021 சுமார் 20 வயது மதிக்கதக்க பெண் பெயர் விலாசம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக சுற்றி திரிந்தார். அவரை மீட்ட காவல் கரங்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து அவரை பாதுகாப்பாக காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டது. காவல் கரங்கள் மூலம் விசாரணை செய்ததில் அவர் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மஜோலி கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வீட்டில் இருந்து காணாமல் போனதால் ஜபல்பூர் மஜோலி காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற தகவலும் தெரியவந்தது. அந்தப் பெண் தன் சகோதரனிடம் சண்டையிட்டு சென்றதாகவும், தெரிவித்தார்கள். காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட பெண்ணை அவரது குடும்பத்தாரை அழைத்து அவரை நல்லமுறையில் அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டது.

  • சென்னையில் மீட்கப்பட்ட 127 ராஜஸ்தான் நபர்கள்

கருணை பயணம்- ஏற்பாடு செய்து சென்னையில் மனநலம் சரியில்லாமல், ஆதரவின்றி சுற்றி திரிந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 127 நபர்களை மீட்டு அவர்களை 25.07.2021 அன்று சென்னையிலிருந்து இருந்து ராஜஸ்தான் பரத்பூரில் உள்ள APNA GHAR க்கு அனுப்பி வைத்து அவர்களை அவர்கள் குடும்பங்களுடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டது.

  • ராஜஸ்தானில் மீட்கப்பட்ட தமிழக நபர்கள்

கருணை பயணம்-1 ன் தொடர்ச்சியாக 11.08.2021 ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள APNA GHAR-ல் இருந்து தென் மாநிலங்களை சேர்ந்த (தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம்) 38 பேரை (14 ஆண்கள் மற்றும் 24 பெண்கள்) நபர்களை மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களில் 35 நபர்களின் முகவரி கண்டறிந்து அவர்களது குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டது. மீதமுள்ள 3 நபர்களை பாதுகாப்பாக காப்பகத்தில் தங்க வைத்து அவர்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்க பிற கைவினைப்பொருட்கள் செய்ய பயிற்சியும் அளிக்கப்படுகிறது. குறிப்பிடும்படியாக, காவல் கரங்கள் மூலம் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மீட்கப்பட்ட திரு செல்வம், கடந்த 2004-ம் ஏற்பட்ட சுனாமியால் தனது குடும்பத்தை இழந்துவிட்டதாகவும், தான் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றதாகவும் அவரை காவல் கரங்கள் மூலம் மீட்டு அவருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் காவல் கரங்கள் மூலம் மாதம் ரூபாய் 9000/- சம்பளத்தில் வேலை ஏற்பாடு செய்யப்பட்டு அவர் நல்ல முறையில் வேலை செய்து வருகிறார்.

  • காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட தேவி

காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட சிவதேவி (எ) மல்லிகா என்பவரை காவல் கரங்கள் மூலம் மீட்டு தனது மகன் பிரபு என்பவரிடம் காவல் கரங்கள் மூலம் விசாரணை செய்ததில் தனது அம்மா 31 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போனதாகவும், தன்னை பார்த்துகொள்வதற்கு யாரும் இல்லாமல் தான் இராமகிருஷ்ணா மிஷனில் தங்கி படித்து வந்ததாகவும், தெரிவித்து தனது அம்மா காவல் கரங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு தன்னிடம் சேர்த்தற்கு நன்றி தெரிவித்து தான் இன்று தான் தனக்கு விவரம் தெரிந்து தனது அம்மாவை பார்ப்பதாகவும் தெரிவித்தார். தனது மகனிடம் காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட சிவதேவி (எ) மல்லிகா என்பவரை 11.08.2021 அன்று நல்ல முறையில் சேர்த்துவைக்கப்பட்டது.

  • 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஆந்திர பெண் மீட்பு

ஆந்திர மாநிலம் மார்ச்செல்லா பகுதியை சேர்ந்த ஜோதி (எ) தேசவத்புஜ்ஜி, பெ/வ 36 என்பவரை பற்றி அவரது குடும்பத்தினரிடம் விசாரணை செய்ய அவர் கடந்த 2014 ஆண்டு காணாமல் போனதாவும், அவரை பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் ஆந்திர மாநிலம் மார்ச்செல்லா காவல் நிலைய குற்ற எண் 214/2014 நாள் 16.10.2014 (பெண் காணவில்லை ) என்று வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் காப்பகத்தில் இருந்து காவல் கரங்கள் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட ஜோதி (எ) தேசவத்புஜ்ஜி, என்பவரை பாதுகாப்பாக அவரது கணவர் மற்றும் மாாச்செல்லா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் 1 காவலர் ஆகியவர்களிடம் 7 வருடங்களுக்கு பிறகு 11.08.2021 அன்று நல்ல முறையில் சேர்த்துவைக்கப்பட்டது.

  • முதியோர் இல்லங்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் வழங்கல்

காவல் கரங்கள் உதவி மையத்தின் 25.04.2022 அன்று ஒரு வருட நிறைவு விழாவின் போது கலைவாணி முதியோர் இல்லம், சாய் ராம் முதியோர் இல்லம், அன்பகம், லிட்டில் ஹாட்ஸ் முதியோர் இல்லம், சாய் முதியோர் இல்லம், ஆகிய காப்பகங்களுக்கு தேவையான சக்கர நாற்காலி -2, தையல் இயந்திரம் -2, குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் -1 ஆகிய நலதிட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

  • காவல் கரங்கள் பற்றிய விழிப்புணர்வு

மேலும் காவல் கரங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடந்த 01.05.2022 காலை 07.00 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் முதல் ஆவின் வரையிலும், ஆவின் முதல் பெசன்ட் நகர் வரையிலும் (5 கிலோ மீட்டர்) விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள், என 300 பேர் கலந்துகொண்டனர்.

  • கல்லூரி மாணவர்களுக்கும் காவல் கரங்கள் பயிற்சி

அதேபோல் இளம் தலைமுறையினர் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் விதமாக, காவல் கரங்கள் மூலம் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களான இளங்கலை சமூகப் பணி மற்றும் முதுநிலை சமூகப் பணிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களை காவல் கரங்களுடன் இணைக்கப்பட்டு தன்னார்வலர்களுடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டது. இதுவரை Madras School of Social Work College, Thiruthangal Nadar College, Sindhi College of Arts & Science , ஆகிய கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் காவல் கரங்களுடன் இணைந்து பயிற்சி மற்றும் களபணி செய்து வருகிறார்கள்.

  • புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை

கடந்த 02.03.2022 அன்று காவல் கரங்கள் மூலம் புற்று நோயால் பாதிக்கபட்ட காவல் ஆளிநர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கும் Breast Cancer, போன்ற புற்று நோய் பரிசோதனையும், தொடர்ந்து இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவ குழு மற்றும் அமைப்பின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காவல் துறையை சேர்ந்த 19 நபர்களுக்கு புற்று நோய் பரிசோதனை மற்றும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டது.

அந்த வகையில்சென்னை பெருநகரில் “காவல் கரங்கள்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலுக்கு நேற்று முன்தினம் (15.08.2022) நடந்த சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் “நல் ஆளுமை” விருது வழங்கினார்.

இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 2,658 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 2,111 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும், 269 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 258 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், 108 ஆம்பூலன்ஸ் மூலம் 20 நபர்களை மீட்கப்பட்டுள்ளார்கள். உரிமை கோரப்படாத 1186 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருகிறது.

காவல் கரங்கள் உதவி மையத்தின் அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட எங்களின் பணி மேலும் பலரைச் சென்றடையவும், மீட்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்யவும், காவல் கரங்கள் உதவி மையம் தொடர்ந்து பணி செய்து வருகிறது.