Take a fresh look at your lifestyle.

போலி சோப்பு தொழிற்சாலை நடத்திய கும்பல் கைது: * ஆவடி காவல் ஆணையரகம் நடவடிக்கை

82

சென்னை, நவ. 18–

சென்னையை அடுத்த சோழவரத்தில் பிரபல நிறுவனம் பெயரில் போலி சோப்பு தொழிற்சாலை நடத்திய கும்பலை ஆவடி காவல் ஆணையரக போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சோழவரம் பகுதியில் பிரபல சோப்பு நிறுவனங்களான சர்ப் எக்ஸ்செல் பெயரில் போலியாக சோப்பு தொழிற்சாலை இயங்கி வருவதாக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் செங்குன்றம் துணைக்கமிஷனர் மணிவண்ணன் மேற்பார்வையில் சோழவரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பொன்னேரி, எடப்பாளையம், ஸ்ரீராம் நகர் மற்றும் அலமாதி, புவனேஷ்வரி நகர் பகுதிகளில் போலீசார் கண்காணித்ததில் அங்கு போலி சோப்பு தொழிற்சாலை இயங்கி வருவது தெரியவந்தது. அதனையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பிரபல சோப்பு நிறுவனங்களான சர்ப் எக்ஸ்செல் வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு, வாஷிங் மிஷனில் துவைக்கப்பயன்படுத்தப்படும் லிக்யூட் ஆகியவற்றை போலியாக தயார் செய்வது தெரியவந்தது.

அங்கிருந்த சலவைக்கு பயன்படுத்தும் மூலப்பொருட்கள் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவற்றை பேக் செய்ய பயன்படும் உபகரணங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன. அந்த தொழிற்சாலையை அங்கு நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவி (48), வேலூரைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (37), உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரான்ஸ்குமார் (26), மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரபால் (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட அருண், முனவர் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டனர். போலி சோப்பு தொழிற்சாலையை நடத்தி வந்த நபர்களை கைது செய்த சோழவரம் போலீசாரை ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.