Take a fresh look at your lifestyle.

போலி ஆவணம் மூலம் நிலம் விற்று ரூ. 99 லட்சம் பண மோசடி: மூன்று பேர் கைது

119

சென்னை ஆவடியில் ஆள்மாறாட்டம், போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை செய்து ரூ. 99 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, பூந்தமல்லியைச் சேர்ந்தவர் வடிவேலு (50). இவர் நிலம் வாங்குவதற்காக விற்பனை நிலங்களை பார்த்து வந்தார். அப்போது பூந்தமல்லி காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் என்ற இடத்தில் 2,400 சதுர அடியில் பட்டா நிலம் இருப்பதாக புரோக்கர்கள் செல்வகுமார் மற்றும் சின்னதுரை ஆகியோர் வடிவேலுவை அணுகியுள்ளனர். அந்த இடமானது கோபாலபுரத்தைச் சேர்ந்த கல்யாணி மற்றும் தியாகராஜன் ஆகியோ ருக்கு சொந்தமானது என்றும் அதை அந்தோணி ஜெனித் என்பவர் பவர் வாங்கி வைத்துள்ள தாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வடிவேலு அந்த இடத்தை வாங்க முடிவு செய்து ரூ. 93 லட்சத்துக்கு விலை பேசியுள்ளார். அதன் பின்பு கடந்த ஏப்ரல் மாதம் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்ட்ரூஸ், அந்தோணி ஜெனித், செல்வகுமார். சின்ன துரை மற்றும் குருசாமி ஆகியோர்களிடம் ரொக்கமாகவும், டிடியாகவும் ரூ. 99,50,000 கொடுத்துள்ளார். பின்னர் அந்தோணி ஜெனித் அந்த நிலத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து வடிவேலுவை தொடர்பு கொண்டு அசல் பத்திரங்களை கொண்டு வரச் சொல்லியுள்ளனர். அப்போது கல்யாணி மற்றும் தியாகராஜன் ஆகியோர் பேரில் வேறு நபர்களை காட்டி ஆள்மாறாட்டம் மூலம் வடிவேலுவிடம் ஆன்ட்ரூஸ் உள்ளிட்ட நான்கு பேரும் நிலம் விற்று பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வடிவேலு ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் அளித்தார். போலி ஆவண மோசடி தடுப்புப்பிரிவு உதவிக்கமிஷனர் கந்தன், இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம், போலி ஆவணம் மூலம் மோசடி நடந்தது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட சென்னை காட்டுப் பாக்கத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (39), செல்வகுமார் (38), குருசாமி (62) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.