Take a fresh look at your lifestyle.

போலி ஆவணம் மூலம் நிலமோசடி: சமக இளைஞரணி நிர்வாகி கைது

104

சென்னை வடபழனியில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சியின் இளைஞரணி நிர்வாகியை சென்னை வடபழனி போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அயனாவரம், சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (43). சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார். சரவணனின் தந்தை சென்னை, மவுண்ட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வேலை செய்து வந்த நிலையில் திடீரென இறந்து விட்டார். இதனால் அந்த வேலை சரவணனின் தாய் லீலாபாய்க்கு கிடைத்தது. இந்நிலையில் லீலாபாய் 2வதாக தர்மலிங்கம் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவரும் இறந்து விட்டார். இந்நிலையில் சரவணன் தனது வீட்டில் சகோதரி இளையராணியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு லீலாபாய் இறந்து விட்டார். லீலாபாய்க்கு சொந்தமான 100 சவரன் தங்க நகை மற்றும் அவரது ஓய்வூதியப் பணம் ரூ. 30 லட்சம், கூடுவாஞ்சேரியில் அரை கிரவுண்டு நிலம் மற்றும் காளஹஸ்தியில் 6 ஏக்கர் இடத்திற்கான பத்திரம் ஆகியவை தங்கை இளையராணியிடம் இருந்துள்ளது.

இந்நிலையில் சரவணனின் மற்றொரு சகோதரர் டில்லிகுமார், இளையராணி ஆகியோர் தாயாரின் சொத்தை மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது வரை சொத்தை பிரித்து கொடுக்காமல் வீட்டை பூட்டி வெளியே சென்று உள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவணன் சென்னை அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இளையராணியை காவல் நிலையம் அழைத்து வந்து சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி எழுதி வாங்கியுள்ளனர். ஆனால் இளையராணி சொத்தை பிரித்துக் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து சரவணன், கூடுவாஞ்சேரியில் உள்ள தாயார் லீலாபாய் பெயரில் உள்ள சொத்து சம்பந்தமான விவரங்களை சோதனை செய்தபோது அது விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக நடத்திய விசாரணையில் இளையராணி போலி வாரிசு சான்றிதழ் தயார் செய்து சொத்தை பெயர் மாற்றம் செய்துள்ளது தெரியவந்தது. அது தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இளையராணி கிச்சா ரமேஷ் என்பவரிடம் பெற்ற கடன் தொகையை செலுத்த மேற்கண்ட கூடுவாஞ்சேரியில் உள்ள சொத்தை விற்பனை செய்ததாகவும், இளையராணி பெயரில் போலியான வாரிசு சான்றிதழ் தயார் செய்து கொடுத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் ரமேஷ் என்கிற கிச்சாவை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிச்சா நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில அணி இணைச்செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.