சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் சிறப்பாக காவல் பணிபுரியும் மற்றும் போதை புகையிலை பொருட்கள் பதுக்கும் குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். காவல் அதிகாரிகள் தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் ஜானி செல்லப்பா தலைமையில், தலைமைக் செகாவலர்கள் சீத்தாராமன், ராஜசேகர், முதல்நிலைக் காவலர் என்.பாக்கியராஜ், காவலர் அருள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ரிச்சர்டு டேவிட் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 07.04.2022 அன்று அதிகாலை 518 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
அதே போல சென்னை, காசிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 600 கிராம் கஞ்சா, 1 கிராம் மெத்தம்பெட்டமைன், 80 LSD ஸ்டாம்ப், 150 MDMA மாத்திரைகள் மற்றும் 15 கிராம் கோடை காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் காதர் மீரா, செல்வகுமார் ஆகியோர் தலைமையில், தலைமைக் காவலர்கள் மனுவேல், ராஜவேல், சரவணகுமார், அசோக்குமார், சரவணன், முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் காசி, கார்த்திக் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜீவந்தன் (26) என்பவரைக் கைது செய்தனர். ஜீவந்தன் போதை பொருட்களை வெளிநாட்டிலிருந்து ஒரு செல்போன் செயலி மூலம் ஆர்டர் செய்து, இணைய வழி மூலம் பணபரிவர்த்தனை செய்து, கொரியர் மூலம் பெற்று, சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
சிறப்பாக பணிபுரிந்து போதை மற்றும் புகையிலை பொருட்கள் வைத்திருந்த நபர்களை கைது செய்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளரின் தனிப்படை குழுவினர் மற்றும் ஓட்டேரி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.